செல்லப்பிராண கடைகளில் ரூ.பல லட்சம் மோசடி வாலிபரை பொறி வைத்து துாக்கிய வியாபாரிகள்

அரும்பாக்கம்: செல்லப் பிராணிகளுக்கான உணவுப் பொருட்களை வாங்கி, போலி யு.பி.ஐ., பணப்பரிவர்த்தனை தகவல்களை காட்டி, வியாபாரிகள் பலரிடம் பல லட்சம் ரூபாய் மோசடி செய்த லிங்கேஸ்வரன், 25, என்பவரை, வியாபாரிகள் சாதுர்யமாக மடக்கிப் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.

அரும்பாக்கம், ராசா கார்டன் பகுதியில், வண்ண மீன்கள் மற்றும் செல்லப் பிராணிகளுக்கான உணவுப் பொருட்கள் விற்பனை கடை நடத்தி வருபவர் பார்த்தசாரதி, 46.

இவரது கடைக்கு ஆக., 14ம் தேதி வந்த நபர் ஒருவர், 8,120 ரூபாய்க்கு பொருட்களை வாங்கியுள்ளார். அதற்கான தொகையைச் செலுத்த, தன் மொபைலில் இருந்த போலி யு.பி.ஐ., பணப்பரிவர்த்தனை தகவல்களை காட்டியுள்ளார். பணம் வெற்றிகரமாக அனுப்பப்பட்டுவிட்டது போன்ற போலி திரையைக் காட்டிவிட்டு, பொருட்களை எடுத்துக்கொண்டு அங்கிருந்து சென்றுள்ளார்.

ஆனால், தன் வங்கிக் கணக்கிற்குப் பணம் வரவில்லை என்பதை உணர்ந்த கடை உரிமையாளர், இதுகுறித்து அரும்பாக்கம் போலீசில் புகார் அளித்தார்.

இதுபோன்று கடைக்காரர்கள் பலர் பாதிக்கப்பட்டனர். இதையடுத்து, தமிழ்நாடு சில்லரை விற்பனை செல்லப் பிராணிகள் உரிமையாளர்கள் நலச்சங்கத்தினர், அண்ணாநகர் சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தனர்.

இந்நிலையில், அயப்பாக்கத்தில் கடை நடத்தும் ஜெய்கணேஷ், 40, என்பவரை நேற்று முன்தினம் இரவு தொடர்பு கொண்ட நபர், பொருட்களை ஆர்டர் செய்து, ‘ஆன்லைன்’ டெலிவரி மூலம் அனுப்புமாறு கேட்டுள்ளார். தொடர்பு கொண்ட மொபைல் போன் ஏற்கனவே, அக்கடையில் பதிவாகி இருந்தது.

அதேநேரம், பொருளை பெற ‘ஆன்லைன்’ டெலிவரி ஊழியரையும், மர்ம நபர் கடைக்கு அனுப்பி வைத்துள்ளார்.

சந்தேகமடைந்த கடைக்காரர் ஜெய்கணேஷ், டெலிவரி ஊழியரிடம் பேசி, அந்த நபரின் முகவரியை பெற்றுள்ளார். பின், மற்ற கடைக்காரர்களுடன் இணைந்து, டெலிவரி ஊழியர் வேடத்தில் சென்று பொருட்களைப் பெற வந்த நபரை, பருத்திப்பட்டு அருகே மடக்கிப் பிடித்து போலீசில் ஒப்படைத்தார்.

விசாரணையில், திருவேற்காடு, செந்நீர்குப்பத்தைச் சேர்ந்த பட்டதாரி வாலிபர் லிங்கேஸ்வரன், 25, என்பது தெரியவந்தது. இவர், தன் நண்பர் கிஷோர் பாலாஜியுடன் சேர்ந்து, பணம் செலுத்தியதாகப் போலியான தகவல்களைக் காட்டி, பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்களைப் பெற்று மோசடி செய்துள்ளார். குறிப்பாக, கடைகள் மூடும் இரவு நேரங்களில் அவசர கதியில் இருப்பது போன்று நடித்து, இந்த மோசடியில் ஈடுபட்டுள்ளனர். லிங்கேஸ்வரனின் கூட்டாளியை அரும்பாக்கம் போலீசார் தேடி வருகின்றனர்.

Advertisement