மாநகராட்சி அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை: கணக்கில் வராத ரூ.9 ஆயிரம் பறிமுதல்
திண்டுக்கல்: திண்டுக்கல் மாநகராட்சி அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் நேற்று 5 மணி நேரத்திற்கும் மேலாக சோதனை நடத்தினர். அப்போது அலுவலக உதவியாளரிடம் இருந்து கணக்கில் வராத ரூ.9 ஆயிரத்தை கைப்பற்றினர்.
மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை டி.எஸ்.பி., நாகராஜன் தலைமையில் இன்ஸ்பெக்டர் பழனிச்சாமி உள்ளிட்ட 10 பேர் கொண்ட குழுவினர் நேற்று மாலை 3:00 மணிக்கு திண்டுக்கல் மாநகராட்சி அலுவலகத்தில் திடீர் சோதனை நடத்தினர்.
அப்போது கமிஷனர் பிரேம்ஆனந்த் அலுவலகத்தில் இல்லை. செயற்பொறியாளர் சணல்குமார் உள்ளிட்ட அலுவலர்கள் இருந்தனர். அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அங்கிருந்த 4 ஒப்பந்ததாரர்கள் மாநகராட்சி பதிவேட்டில் பதிவிட்டு பணத்தை அலுவலகத்திற்கு கொண்டு வந்ததால் விடுவித்தனர்.
பின்னர் அனைவரது பெயர், அலைபேசி எண்களை பதிவு செய்த போலீசார் ஜிபே, போன்பே, கூகுள் பே, வங்கி செயலிகள் மூலம் பணப்பரிமாற்றம் நடந்துள்ளதா என ஆய்வு செய்தனர்.
அலுவலக உதவியாளர் திருமாறன் மாநகராட்சி பதிவேட்டில் குறிப்பிடாமல் கொண்டு வந்திருந்த ரூ.9 ஆயிரம் குறித்து விசாரித்தனர். அவர் முறையான தகவல் தெரிவிக்காத நிலையில் அந்த பணத்தை கைப்பற்றினர். இரவு 8:15 மணி வரை 5 மணி நேரத்திற்கும் மேலாக இந்த சோதனை நடந்தது.
டி.எஸ்.பி., கூறுகையில், ‘கைப்பற்றிய பணத்திற்கு உரிய விளக்கம் அளிக்காவிட்டால் வழக்குப்பதிவு செய்து மேல் நடவடிக்கையை தொடர்வோம்’ என்றார்.