டிரான்ஸ்பார்மர் பழுது பரனுார் விவசாயிகள் கவலை

திருக்கோவிலுார்: கண்டாச்சிபுரம் அடுத்த பரனுார் கிராமத்தில் டிரான்ஸ்பார்மர் பழுதானதால் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

பரனுாரில் எஸ்.எஸ்., 3 டிரான்ஸ்பார்மர் ஒரு வாரத்திற்கு முன் பெய்த கனமழையின் போது, மின்னல் தாக்கி பழுதானது. இதுகுறித்து முகையூர் உதவி மின் பொறியாளர் அலுவலகத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

இதனைப் பார்வையிட்ட அதிகாரிகள் டிரான்ஸ்பார்மர் பழுதாகி விட்டதால் அதனை மாற்ற வேண்டும் என கூறிச் சென்றதுடன் சரி. விவசாயிகள் பலமுறை தொடர்பு கொண்டும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இதன் மூலம் 15க்கும் மேற்பட்ட விவசாயம் மின் மோட்டார்கள் செயலிழந்துள்ளது. சம்பா சாகுபடிக்காக நெல் விதைப்பு செய்த விவசாயிகள் நடவு செய்ய முடியாமல் தவித்து வருகின்றனர். மேலும் சிலர் தொடர் மழையின் காரணமாக விவசாயம் மின் மோட்டாரை நம்பி நாற்றங்கால் தயார் செய்ய காத்திருந்து தவித்து வருகின்றனர்.

பாதிக்கப்பட்டுள்ள 15க்கும் மேற்பட்ட விவசாயிகளின் உயிர் நாடியாக இருக்கும் விவசாய மின் மோட்டார் இயங்காததால், தங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டிருப்பதாக கவலை அடைந்துள்ளனர்.

பழுதடைந்த டிரான்ஸ்பார்மரை உடனடியாக மாற்ற மின்வாரியம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகளின் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement