புகார் கொடுக்க வந்த பெண்ணிடம் உறவு தனிப்பிரிவு ஏட்டு மீது போலீஸ் வழக்கு
நாகர்கோவில்: கன்னியாகுமரி மாவட்டம் கருங்கல்லில் புகார் கொடுக்க வந்த பெண்ணிடம் உறவு வைத்து ஏமாற்றியதாக தனிப்பிரிவு ஏட்டு சாம்சன் 45, மீது அனைத்து மகளிர் போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
புதுக்கடை கையாளவிலை சாம்சன் போலீஸ தனிப்பிரிவு ஏட்டாக பணிபுரிகிறார். கருங்கல் ஸ்டேஷனில் 2023 -ல் பணியில் இருந்த போது பிலாவிளை நடுத்தேரியைச் சேர்ந்த 37 வயது பெண் கணவருடன் ஏற்பட்ட தகராறு தொடர்பாக புகார் கொடுக்க வந்தார். பெண்ணிடம் அலைபேசி எண்ணை வாங்கிய சாம்சன் அடிக்கடி பேசினார். பின்னர் இருவரும் தனிமையில் சந்தித்தும் கொண்டனர். இதை பயன்படுத்தி பெண்ணுடன் உறவும் வைத்ததாக புகார் எழுந்தது. இரணியலுக்கு சாம்சன் மாறுதலான பிறகும் இருவரின் பழக்கம் நீடித்தது.
இரு வாரங்களுக்கு முன் மீண்டும் கருங்கலுக்கு தனிப்பிரிவு ஏட்டாக சாம்சன் பொறுப்பேற்றார். அங்கு சென்ற பெண்ணுக்கும் இவருக்கும் தகராறு ஏற்பட்டது. இதனால் பெண்ணுடன் தொடர்பை துண்டிக்க சாம்சன் முயன்றார்.
ஆனால் குளச்சல் அனைத்து மகளிர் போலீசில் பெண் அளித்த புகாரில், திருமணமானதை சாம்சன் மறைத்து, தன்னை திருமணம் செய்வதாக ஆசை வார்த்தைகள் கூறி உல்லாசமாக இருந்ததாக தெரிவித்தார். சாம்சன் மீது அனைத்து மகளிர் போலீஸ் நான்கு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்தனர். அவர் தலைமுறைவாகிவிட்டார். அவர் சஸ்பெண்ட் செய்யப்பட இருப்பதாக போலீசார் தெரிவித்தனர்.