கண்மாய் தண்ணீரில் மூழ்கிய பொக்லைன் இயந்திரம் மீட்பு
துாத்துக்குடி: கண்மாய் தண்ணீரில் மூழ்கிய, பொக்லைன் இயந்திரம், இரண்டு நாட்களுக்கு பின் மீட்கப்பட்டது.
துாத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி, வில்லிசேரி கிராமத்தில் நடந்து வந்த கண்மாய் துார்வாரும் பணிகள், மழை காரணமாக, இரண்டு நாட்களுக்கு முன் நிறுத்தப்பட்டன. துார்வாரும் பணியில் ஈடுபடுத்தப்பட்ட பொக்லைன் இயந்திரத்தை, அதன் ஓட்டுநர் கண்மாயின் நடுப்பகுதியில் நிறுத்தி சென்று விட்டார்.
திடீரென பெய்த பலத்த மழையின் காரணமாக, அந்த கண்மாய்க்குள் நீர்வரத்து அதிகரித்து, பொக்லைன் இயந்திரம் தண்ணீரில் மூழ்கியது. தீயணைப்பு துறையினர், பொக்லைன் இயந்திரத்தை மீட்க முயற்சி செய்தும், வெளியே கொண்டுவர முடியவில்லை.
இதையடுத்து, தீயணைப்பு வீரர்கள், கப்பலில் பயன்படுத்தப்படும் இரும்புச் சங்கிலியை கொண்டு வந்து பொக்லைன் இயந்திரத்தில் கட்டி, மற்றொரு பொக்லைன் இயந்திரத்தின் உதவியுடன் இழுத்தனர். ஆனாலும், உடனடியாக மீட்க முடியவில்லை.
இந்நிலையில், இரண்டு நாட்கள் போராட்டத்திற்கு பின், நேற்று தீயணைப்புத் துறையினர், பொக்லைன் இயந்திரத்தை கரைக்கு இழுத்து வந்தனர்.