வீட்டில் தீய சக்தியை விரட்டுவதாக 28 சவரன் நகை, ரூ.12 லட்சம் பறிப்பு: ஓசூரில் ஒரு குடும்பத்தையே 4 மாதம் வீட்டு சிறை வைத்த ஆசாமி
ஓசூர்: ஓசூரில், வாலிபரிடம், பெண் குரலில் பேசி, அவரது வீட்டில் உள்ள தீய சக்தியை விரட்டுவதாக, அவரின் குடும்பத்தை, 4 மாதம் வீட்டு சிறை வைத்து, 12 லட்சம் ரூபாய், 28 சவரன் தங்க நகையை பறித்து சென்ற ஆசாமி குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர், காளேகுண்டாவை சேர்ந்தவர் அருள், 55. வியாபாரி. இவரது மனைவி அஞ்சலை, 50. இவர்களுக்கு, ராஜேஷ், 28, அன்பரசன், 26, குபேந்திரன், 24, என, 3 மகன்கள், ஒரு மகள் உள்ளனர்.
குபேந்திரன் பூ வியாபாரம் செய்கிறார். மே மாதம் அவரது மொபைல்போனில் வந்த அழைப்பில், பெண் குரலில் பேசியவர், தன்னை பிரியா என்றும், பலமுறை அவரை பார்த்திருப்பதாகவும், காதலிப்பதாகவும் கூறியுள்ளார்.
இவர்களின் பேச்சு தொடர்ந்த நிலையில், குபேந்திரன், பிரியாவை பார்க்க, கிருஷ்ணகிரி மேல் தெருவிற்கு இருமுறை சென்றார். ஆனால், அவர் சந்திப்பதை தவிர்த்து விட்டார்.
ஜூனில் குபேந்திரன் வீட்டிற்கு வந்த ஒருவர், தான் பிரியாவின் தம்பி சிவசாரதி, 25, என, அறிமுகமாகி உள்ளார். மேலும், ‘எங்களுக்கு பல இடங்களில் நிலம் உள்ளது. கோவிலும் உள்ளது. அக்காவை திருமணம் செய்த பின், அந்த சொத்துக்கள் அனைத்தையும், உங்கள் குடும்பத்திற்கு வழங்க போகிறேன்’ எனக்கூறி, அதற்கான ஆவணங்கள் இருப்பதாக, ஒரு இரும்பு பெட்டியை வைத்தார்.
அப்போது, ‘இந்த வீட்டில் தீய சக்திகள் உள்ளதால், அக்காவை, இங்கு மருமகளாக அனுப்ப முடியாது. இரும்பு பெட்டியை யாரும் திறக்கக்கூடாது. பரிகார பூஜை செய்து தீயசக்தியை விரட்ட வேண்டும். அதற்கு பல மாதம் ஆகும். அதுவரை யாரும் வீட்டிலிருந்து வெளியே செல்லக்கூடாது. பூஜை முடிந்த உடன் தீய சக்தி வெளியேறிவிடும். அதன் பின் இரும்பு பெட்டியை, நானே திறந்து ஆவணங்களை காட்டுகிறேன்’ என, கூறியுள்ளார்.
ஆரம்பத்தில் பூஜைக்காக பணம் செலவு செய்து வந்த சிவசாரதி, அதன் பின், குபேந்திரனின் தந்தை அருளிடம் பணம் கேட்க துவங்கினார். அவர், வீட்டை அடமானம் வைத்தும், நிலத்தை விற்றும், 12 லட்சம் ரூபாய் வரை வழங்கினார்.
தினமும் காலை, 6:00 மணிக்கு, கிருஷ்ணகிரியிலிருந்து சிவசாரதியை, தன் பைக்கில் குபேந்திரன் வீட்டிற்கு அழைத்து வருவார். இரவு, 7:00 மணிக்கு மீண்டும், கிருஷ்ணகிரிக்கு சென்றுவிடுவார். தினமும் குபேந்திரனின் வீட்டுக்கு வந்த பின், பெண் உடை அணிந்தபடி நடனமாடி, பூஜை செய்த சிவசாரதி, தீய சக்தி இருப்பதாக கூறி, வீட்டின் கதவு, ஜன்னல்களை உடைத்துள்ளார். குபேந்திரன் தாய், தங்கை, அண்ணியின் நகைகளை தீட்டு எனக்கூறி, அவர் வாங்கிக்கொண்டார்.
அருளிடம் பணம் வாங்கி, வீட்டை சுற்றி, ஆறு ‘சி.சி.டி.வி’ கேமராக்களை பொருத்தி, அதை கண்காணித்து, குபேந்திரன் குடும்பத்தினர் வீட்டை விட்டு வெளியே சென்றால், கண்காணித்து, அவர்களை சாட்டையால் அடித்தும், உடம்பில் சூடும் வைத்துள்ளார்.
யாரேனும் வெளியே சென்றாலும், உறவினர்கள் வந்தாலும், குடும்பத்தில் உயிரிழப்பு ஏற்படும் எனக்கூறி மிரட்டியுள்ளார். அதனால், குபேந்திரன் குடும்பத்தினர் வேலைக்கு கூட செல்லாமல், வீட்டிலேயே முடங்கினர்.
வீட்டில் பூஜை நடப்பதாக கூறி, வீட்டின் முன்புறம் பந்தல் அமைத்து, வீட்டிற்கு சீரியல் விளக்கு அலங்காரம் செய்திருந்தனர். பூஜை நல்லபடியாக முடிந்தால், 100 கோடி ரூபாய் வரும் என, குபேந்திரன் குடும்பத்தினரை நம்ப வைத்து, பெண்கள் அணிந்திருந்த 28 சவரன் நகையை, சிவசாரதி வாங்கிச் சென்றார்.
கடந்த, 10 நாட்களுக்கு முன் சிவசாரதி மீது சந்தேகம் வந்து, அவரிடம் குபேந்திரன் விசாரித்துள்ளார். குபேந்திரனை, சிவசாரதி தரக்குறைவாக பேசவே, இருவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. அன்றிலிருந்து சிவசாரதி, குபேந்திரன் வீட்டுக்கு வருவதை நிறுத்திக்கொண்டார்.
அதன் பின்னர் தான், தன்னிடம் பிரியா என்ற பெயரில் பேசி வந்தது சிவசாரதி தான் என, குபேந்திரன் அறிந்தார். மேலும், அவர் விட்டுச்சென்ற சொத்து ஆவணங்கள் அடங்கிய இரும்பு பெட்டியை திறந்து பார்த்த போது, அதில் வெற்று காகிதங்கள் இருந்தன. அதிர்ச்சியடைந்த குபேந்திரன் குடும்பத்தினர், ஓசூர் டவுன் ஸ்டேஷனில் நேற்று புகார் செய்தனர்.
நான்கு மாதமாக ஒரு குடும்பத்தையே, ஒருவர் வீட்டு சிறையில் வைத்திருந்ததை அறிந்த போலீசார் அதிர்சியடைந்தனர். ஓசூர் இன்ஸ்பெக்டர் பிரகாஷ், புகார் தொடர்பாக விசாரித்து வருகிறார்.
மேலும்
-
இரண்டு மாத குழந்தை வயிற்றில் வளரும் கரு
-
மழைநீர் வெளியேற்ற எம்.எல்.ஏ., நடவடிக்கை
-
இறப்பு விபர மருத்துவ சான்றிதழ்கள் ஆரம்ப சுகாதார நிலையங்களில் வழங்க கோரிக்கை
-
நத்தம் ரோட்டில் அதிகரிக்கும் டூவீலர் விபத்து உயிரிழப்புக்கள்: எஸ்.பி., நடவடிக்கை அவசியம்
-
திருவொற்றியூர் வாரிய குடியிருப்பு கட்டுமான பணிகள் இழுபறி மூன்று ஆண்டுகளாக சிரமப்பட்டு வரும் பயனாளிகள்
-
இடிந்து விழும் அபாயத்தில் வன அலுவலகம்: ஊழியர்கள் அச்சம்: புதுப்பிக்க நிதியில்லை