நட்சத்திரங்களின் வழிகாட்டுதலில் பசுமை உலகம்!
நட்சத்திரவனம் என்பது மரங்கள் நிறைந்த ஒரு தோட்டம் என்ற அளவில்சுருக்கிவிடக்கூடிய இடமன்று. வானியல் மரபு, தாவர உலகம், பண்பாட்டு நம்பிக்கைகள், சுற்றுச்சூழல் விழிப்புணர்வு ஆகியவை ஒன்றோடொன்று சந்திக்கும் ஓர் இயற்கைக் கல்விக்கூடம்.
நம் முன்னோர், இறையையும், இயற்கையையும் தனித்தனியே பிரித்துப்பார்க்கவில்லை. வானத்தை வாசித்தவர்கள் வனத்தையும் வாழ்வின் ஒருபகுதியாகவே பார்த்தனர். துளசி செடி வீட்டில் வளர்ப்பதும், வாசலில் பூச்செடிகளை வைப்பதும், தோட்டத்தில் நிழல்தரும் மரங்களை நடுவதும் நமது வாழ்வியலோடு கலந்தவை.
ஆனால், 27 நட்சத்திரங்களின் அடிப்படையில் அமைந்த 108 மரங்களைகொண்ட ஒரு முழுமையான பசுமை உலகை ஒரே இடத்தில் காண்பதுதனித்துவமான அனுபவம். அத்தகைய அரிய வாய்ப்பை வழங்குகிறதுபெரியநாயக்கன்பாளையம் ராமகிருஷ்ணா மிஷன் வித்யாலயா வளாகத்தில் பராமரிக்கப்பட்டு வரும் நட்சத்திரவனம்.
நட்சத்திரங்களின் கணக்கையும், மரங்களின் மகத்துவத்தையும் இணைத்து படைத்த இயற்கையின் அரிய அடையாளம்தான் நட்சத்திரவனம். பழங்காலத்தில் காலத்தையும் கோள்களின் இயக்கத்தையும் கணக்கிடுவதில் நமது பெரியவர்கள் சிறந்து விளங்கினர்.
ஒரு குழந்தை பிறக்கும் துல்லியமான நேரத்தையும், அந்த நேரத்தில் சந்திரன் அமைந்துள்ள நிலையையும் கொண்டு ஜென்ம நட்சத்திரம் கணிக்கப்படுகிறது. ஒவ்வொரு நட்சத்திரமும் நான்குபாதங்களாக பிரிக்கப்படுகிறது.
இவ்வாறு வானில் சந்திரனின் நிலையைக் கொண்டு அறியப்படும் நட்சத்திரம், நமது பண்பாட்டில் பெயர் சூட்டுதல், திருமணப் பொருத்தம்உள்ளிட்ட பல்வேறு மரபுகளுடன் தொடர்புபடுத்தப்பட்டுள்ளது. அந்த நட்சத்திர மரபை இயற்கையோடு இணைத்துப் புரிந்துகொள்ளும் ஓர் அழகிய வாய்ப்பினை நட்சத்திரவனம் நல்குகிறது.
இங்கு, 27 நட்சத்திரங்களுடன் தொடர்புபடுத்தப்பட்ட 108மரங்களையும் ஒரே வளாகத்தில் கண்டு அறிந்துகொள்ளும் வாய்ப்பு கிடைக்கிறது. ஒவ்வொரு நட்சத்திரத்திற்கும் உரியதாக மரபில் அடையாளப்படுத்தப்படும் மரங்களைப் பார்வையிடலாம்; அவற்றின் பெயர்களையும் தன்மைகளையும் அறிந்துகொள்ளலாம்.
நமது வாழ்விடங்களில் வளர்க்க இயலாத மரங்களைக்கூடஇங்கே நேரில் காண முடியும். மரத்தின் இலை, தண்டு, கிளை, பட்டை, நிழல் என இயற்கையை நேரில் உணரும் அனுபவமாக மாறும். தாவரங்களை அடையாளம் காணவும், அவற்றின் வேறுபாடுகளை அறியவும், மரங்களைப் பாதுகாக்க வேண்டியதன் அவசியத்தை உணரவும் குழந்தைகளுக்கு இது உதவும்.