மாநில கால்பந்து போட்டி; மதுரை அணி வெற்றி
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்ட கால்பந்து கழகம், புனித மரியன்னை மேல்நிலைப்பள்ளி முன்னாள் மாணவர் சங்கம் சார்பில் டாக்டர் சேவியர் பிரிட்டோ -எக்ஸ்.பி., குரூப்ஸ் சேலஞ்சர் டிராபிக்கான மாநில கால்பந்து போட்டி புனித மரியன்னை மேல்நிலைப் பள்ளி மைதானத்தில் அக்.,22 முதல் இன்று (அக்.,24) வரை நடந்தது.
தமிழகம் முழுவதும் இருந்து மொத்தம் 12 அணிகள் பங்கேற்று விளையாடின. லீக், நாக் அவுட் முறையில் போட்டிகள் நடந்தது.
அரையிறுதியில் திண்டுக்கல் புனித மரியன்னை மேல்நிலைப்பள்ளி அணி, ஈரோடு ராஜேந்திரா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, மதுரை அமெரிக்கன் மேல்நிலைப்பள்ளி, சேலம் ஜி.எம்.சி.கே., மேல்நிலைப்பள்ளி அணிகள் விளையாடின.
மூன்றாம் இடத்துக்கான போட்டியில் திண்டுக்கல் புனித மரியன்னை பள்ளி அணி சேலம் அணியை 3:0 கோல்கணக்கில் வென்றது. ஹரி 2, கவுதம் ஒரு கோல் அடித்தனர். இறுதிப் போட்டியில் மதுரை அமெரிக்கன் பள்ளி ஈரோடு பள்ளி அணிகள் மோதின. மதுரை அணி 2:0 கோல்கணக்கில் ஈரோடு அணியை வென்றது. சுஜில்தோவ், பாலாஜி தலா ஒரு கோல் அடித்தனர்.
தொடர்ந்து பரிசளிப்பு விழா நடந்தது. புரவலர் சுந்தரராஜன் தலைமை வகித்தார். சுகுமார், ரத்தினம், ரமேஷ் பட்டேல் பங்கேற்று பரிசுகள் வழங்கினர். மாவட்ட கால்பந்து கழக செயலாளர் சண்முகம், பள்ளி நிர்வாகத்தினர் ஏற்பாடுகள் செய்திருந்தனர்.