ரூ.2 கோடி தங்கப்பசை ஏர்போர்ட்டில் பறிமுதல்

சென்னை: ஆசிய நாடுகளில் ஒன்றான சிங்கப்பூரில் இருந்து சென்னை வந்த விமானத்தில், இரண்டு கோடி ரூபாய் மதிப்புள்ள தங்கப்பசைகளை கடத்தி வந்த இருவரை, சுங்க அதிகாரிகள் கைது செய்தனர்.

சிங்கப்பூரில் இருந்து, நேற்று முன்தினம் நள்ளிரவு சென்னை வந்த தனியார் விமானத்தில், சென்னையைச் சேர்ந்த இரண்டு ஆண் பயணியர் வந்தனர்.

அவர்களது பாஸ்போர்ட் பயண விபரத்தை, சுங்க அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

அதில் இருவரும், சிங்கப்பூருக்கு சுற்றுலா சென்று திரும்பியது தெரிந்தது. இருவரையும் முழுமையாக பரிசோதித்தனர்.

இருவரின் ஆசன வாயிலில், 2.10 கோடி ரூபாய் மதிப்புள்ள, 24 காரட் தரமுடைய 1.65 கிலோ தங்கப்பசைகளை, கேப்சூல் வடிவில் மறைத்து வைத்திருந்தது தெரிந்தது.

இதையடுத்து சுங்க அதிகாரிகள், இருவரையும் கைது செய்தனர்.

சர்வதேச தங்கம் கடத்தும் கும்பல், இருவரையும் குருவிகளாக சிங்கப்பூருக்கு அனுப்பி வைத்து, தங்கத்தை கடத்தி வர செய்தது தெரிந்தது.

இந்த கடத்தல் கும்பலின் முக்கிய நபர்கள் யார் என்பது குறித்து, அவர்களிடம் விசாரித்து வருகின்றனர்.

Advertisement