சிற்பியின் சிந்தனையில் மகளுக்கு மரியாதை

அம்மாவுக்கு அன்பு: ஆர்வத்துக்கு 'ரோபோ'



ஹைதராபாத்தை சேர்ந்த பத்தாம் வகுப்பு மாணவன் புவனேஷுக்கு, 'ரோபோ' தயார் செய்வதில் ஆர்வம். தன் தாயின் பிறந்த நாளுக்கு, 'ரோபோ'வை பயன்படுத்தி ஒரு கிரீட்டிங் கார்டு கொடுக்க புராஜக்ட் தயார் செய்தான்.

'இன்ப்ரா ரெட் சென்சார், ரேடியோ அலைவரிசை' கொண்ட, 'வயர்லெஸ்' போன்றவை அவனிடம் இருந்தன. யாரேனும் அருகில் வந்தால், சென்சார் தானாக கண்டறிந்து ரிசீவருக்கு தகவல் தெரிவிக்கும். அது பதிலுக்கு ரோப்வேயில் இணைத்துள்ள ரோபோவை செயல்படுத்தும். அந்த ரோபோ, கிரீட்டிங் கார்டை தர வேண்டிய இடத்தில் சென்று கொடுக்கும். புவனேஷ் வெளியிட்டுள்ள இந்த வீடியோவை, இன்ஸ்டாவில் கண்ட வலைதளவாசிகள் பாராட்டி வருகின்றனர்.

சிற்பியின் சிந்தனையில் மகளுக்கு மரியாதை



வழக்கமாக நிறுவனங்களின் பெயர்களை எழுதுபவர்கள், தந்தையின் பெயரை போட்டு, அதன் கடைசியில், 'அண்ட் சன்ஸ்' என்று சேர்த்து விடுவர். அதாவது, தந்தையும், மகன்களும் இணைந்து நடத்தும் நிறுவனம் என்று அர்த்தம். கொல்கட்டா துர்கா பூஜை பந்தலில், ஒரு சிலையின் கீழ் இருந்த பெயர், பலருக்கும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியது. அதில், மகள் என்று குறிப்பிடும் வகையில், 'ஸ்வபன் பால் அண்ட் டாட்டர்' என்று இருந்தது. சிலையை உருவாக்கிய சிற்பி, தன் பெயருடன் மகளையும் சேர்த்து கொண்டுள்ளார்.

'ஒரு சிறிய செய்கை தான். ஆனாலும், இந்த பெயர், அன்பு, பெருமை, சமத்துவம் போன்றவற்றை வலிமையாக வெளிப்படுத்தி விட்டது' என்கிறார், இந்த வீடியோவை வெளியிட்டவர். 'தந்தைக்கும், மகளுக்கும் இருக்கும் பிணைப்பின் முக்கியத்துவத்தை கொண்டாடும் வகையிலான பதிவு' என்கின்றனர் வலைதளவாசிகள்.

மணலில் மலரும் கல்வி: மனதை வென்றார் மூதாட்டி



கேரளாவை சேர்ந்த மூதாட்டி, மணலை பயன்படுத்தி குழந்தைகளுக்கு எழுத்துக்களை கற்பிக்கும் வீடியோ, வலைதளங்களில் பரவி வருகிறது. வரிசையாக அமர்ந்திருக்கும் குழந்தைகள் முன், பக்கெட்டில் கொண்டு வந்த மணலை கொட்டி பரப்புகிறார் அந்த மூதாட்டி. அதில் எழுத்துக்களை மூதாட்டி எழுதிக் காண்பிக்க, அது போல எழுதிப் பழகுகின்றனர் குழந்தைகள். ஆஷாட்டி அம்மும்மா என்ற அந்த மூதாட்டியின் செயலை பார்த்த வலைதளவாசிகள் அவரை மனமுவந்து பாராட்டி வருகின்றனர்.

'கல்விக்கு பணம் அவசியமில்லை, ஒரு சிந்தனை மட்டுமே போதும்' என்கிறார், ஒருவர். 'பழைய நடைமுறைப்படி, எந்தச் செலவும் இன்றி குழந்தைகளுக்கு கல்வி கற்பிக்க முடியும் என்பதை நிரூபிக்கிறார் இந்த மூதாட்டி' என்கின்றனர், வலைதளவாசிகள்.

வான்ஸ் பெயரில் சூறாவளி: கிளம்பியது 'கிண்டல் புயல்'



பசிபிக் கடலில் உருவான சூறாவளிக்கு, 'வான்ஸ்' என்று பெயர் சூட்டியுள்ளது உலக வானிலை அமைப்பு. அமெரிக்க துணை அதிபர் வான்ஸ் பெயர் கொண்ட இந்த சூறாவளி கிளம்பியதும், வலைதளங்களில் கேலி, கிண்டல்கள் வெடித்துக் கிளம்பி விட்டன. நிறையப் பேர், 'சூறாவளி அந்தஸ்தை அடைந்து விட்டதற்கு வாழ்த்துக்கள்' என்று கூறி, வான்சை கிண்டல் செய்கின்றனர். இன்னும் சிலர், இளைய தலைமுறையின் ஆற்றலை வெளிப்படுத்துவதற்காகவே, இந்தப் பெயர் சூட்டப்பட்டதாக கூறுகின்றனர்.

துணை அதிபர் வான்ஸ் முகம், சூறாவளியின் மையத்தில் இருப்பது போன்ற கேலிப்படங்களும் பரவி வருகின்றன. 'துணை அதிபருக்கும் சூறாவளி, புயல் பெயருக்கும் தொடர்பில்லை. புயலுக்கு வான்ஸ் என்ற பெயர் சூட்டியது இது முதல் முறையல்ல; மூன்றாம் முறை' என்கின்றனர், வானிலை ஆர்வலர்கள்.

அக்கப்போர் டிரைவர்: ஆதங்கத்தில் பொறியாளர்



புனே நகரை சேர்ந்த மென்பொறியாளர் பூஜா தீபக், 42, அலுவலகம் செல்வதற்காக பைக் டாக்சியில் பயணித்தார். அவர் கூறிய வழியில் செல்லாத டிரைவர், தான் விரும்பிய வழியில் சென்றார். வாக்குவாதம் ஏற்பட்டது. ஒரு பாலத்தின் மீது பைக்கை நிறுத்திய டிரைவர், பூஜாவை இறங்கச் சொல்லி விட்டார்; பயணத்துக்கு உரிய கட்டணத்தையும் கேட்டார். 'முற்றுப்பெறாத பயணத்துக்கு கட்டணம் தர மாட்டேன்' என்று அவர் கூறியதால் மீண்டும் வாக்குவாதம்.

அந்த டிரைவர், பூஜாவுடன் பேசியபடியே வீடியோவும் எடுத்தார். ஆட்சேபம் தெரிவித்ததை கண்டுகொள்ளவும் இல்லை. வீடியோவை அவர் சமூக வலைதளத்தில் வெளியிட்ட நிலையில், அதிருப்தி அடைந்த பூஜா போலீசில் புகார் அளித்தார். வழக்கு விசாரணை நடக்கிறது.

Advertisement