தொடர் போராட்டங்களால் ஐரோப்பிய நாடுகளில் பதற்றம்; இத்தாலியில் மாபியா கும்பல் ஊடுருவலால் அதிர்ச்சி
-நமது சிறப்பு நிருபர்-
விலைவாசி உயர்வு, விண்ணைத் தொடும் எரிபொருள் விலை, வீட்டு வாடகை அதிகரிப்பு, போதிய வசதிகள் இல்லாத பள்ளிகள் போன்ற காரணங்களால் ஐரோப்பாவின் பல நாடுகளில் போராட்டங்கள் நடக்கின்றன. கடந்த மாதமே துவங்கிய போராட்டங்கள், சிறிய அளவில் அமைதியாக நடந்தன.
பிரான்சில், கடந்த வாரம் நடந்த போராட்டத்தில் வன்முறை வெடித்தது. பாரிஸ் நகரில், 228 வணிக நிறுவனங்கள் உட்பட நாடு முழுதும், 1,500க்கும் மேற்பட்ட வணிக நிறுவனங்கள் சூறையாடப்பட்டன. வாகனங்கள், கடைகளுக்கு தீ வைப்பது என, போராட்டக்காரர்கள் வன்முறையை தீவிரமாக்கினர். 3,000க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர். இந்த வன்முறை, மற்ற ஐரோப்பிய நாடுகளுக்கும் பரவியது.
இத்தாலி, அல்பேனியா, ஸ்பெயின், போர்ச்சுக்கல் உட்பட பல நாடுகளுக்கும் பரவியது. தற்போது போராட்டம் ஓரளவுக்கு ஓய்ந்துள்ளது. எனினும், பதற்றம் நிலவுகிறது. வார இறுதி நாட்களில் வன்முறை மீண்டும் அரங்கேறலாம் என்ற அச்சம், பிரான்ஸ் உட்பட பல ஐரோப்பிய நாடுகளில் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.
புதிய வன்முறைகளுக்கு பயந்து, பிரான்சில் கடைக்காரர்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துள்ளனர். சிலர் கடைகளில் உள்ள பொருட்களை காலி செய்துள்ளனர்; மற்றவர்கள் திருட்டை தடுக்க ஜன்னல்களில் மரப்பலகைகளை பொருத்தி உள்ளனர்.
தற்காப்புக்காக ஆயுதங்களை வாங்கும் நிலைக்கும் கடைக்காரர்கள் தள்ளப்பட்டு உள்ளனர். கலவரத்திற்கு பின் துப்பாக்கி விற்பனை, 10 மடங்கு அதிகரித்துள்ளது. பிரான்சில் மீண்டும் வன்முறை வெடிக்கும் என்ற அச்சத்தால், இந்த வார இறுதியில் நடக்கும் போராட்டங்களை கட்டுப்படுத்த, 70,000 பாதுகாப்புப் படையினர் குவிக்கப்பட்டு உள்ளனர். மாணவர் சங்கம் மற்றும் 'மஞ்சள் அங்கி' இயக்கத்தின் பேரணிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டு உள்ளது. மார்சேய், லியோன் உட்பட பல நகரங்களிலும் போராட்டங்களுக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது.
ஒருவர் பலி
பாரிஸ் நகரில் ராணுவ துப்பாக்கியுடன் காரில் வந்த நபர், நேற்று வெவ்வேறு இடங்களில் ஐந்து பேர் மீது துப்பாக்கியால் சுட்டார். இதில் ஒருவர் உயிரிழந்தார்; 12 வயது சிறுமி உட்பட நான்கு பேர் காயமடைந்தனர். தாக்குதல் நடத்திய நபர் கைது செய்யப்பட்டார். இது பயங்கரவாத செயலா அல்லது இன, மத ரீதியான தாக்குதலா என, போலீசார் விசாரிக்கின்றனர்.
அல்பேனியாவில், கல்விக் கட்டண குறைப்பு, ஊழலுக்கு எதிரான நடவடிக்கை மற்றும் பிரதமர் எடி ராமாவின் அரசை கண்டித்து மாணவர்கள் நடத்தி வரும் போராட்டம் தொடர்ந்து தீவிரமடைந்து வருகிறது. ஸ்பெயின் பொது ஓய்வூதிய பாதுகாப்பு மற்றும் விண்ணை முட்டும் வீட்டு வாடகையை கட்டுப்படுத்தக் கோரி ஓய்வூதியதாரர்களும், மக்களும் போராட்டத்தில் குதித்துள்ளனர். போர்ச்சுக்கலில் வாடகை உயர்வை எளிதாக்கும் மற்றும் குத்தகைதாரர்களை வெளியேற்றும் அரசின் புதிய கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து, மக்கள் வீதிகளில் இறங்கியுள்ளனர்.
@block_P@
மாபியா கும்பல் ஊடுருவல்!
இத்தாலியில், எரிபொருள் மற்றும் உர விலை உயர்வை கண்டித்து லாரி ஓட்டுநர்களும், விவசாயிகளும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த சூழலை சாதகமாக பயன்படுத்தி மாபியா கும்பல்கள் போராட்டத்திற்குள் ஊடுருவி அரசை மிரட்டி வருவதாக, இத்தாலி பிரதமர் ஜார்ஜியா மெலோனி குற்றஞ்சாட்டினார். சிறையில் அடைக்கப்பட்டுள்ள பிரபல போதைப்பொருள் கடத்தல் மன்னன் மிச்சேல் செனிஸ், மொபைல்போன் மூலம் கட்டளையிட்டு, சமீபத்தில், 15 குண்டுவெடிப்புகளை அரங்கேற்றியுள்ளதாக அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன. தலைநகர் ரோம், பேஷன் மற்றும் பொருளாதார தலைநகரான மிலன் உள்ளிட்ட முக்கிய நகரங்களில், பாதுகாப்பில் கூடுதல் ராணுவ வீரர்கள் குவிக்கப்பட்டுள்ளனர்.block_P
மேலும்
-
ஐரோப்பிய நாடுகளில் தொடரும் போராட்டத்தால் பதற்றம்
-
புதிய பஸ் நிலையத்தில் தேங்கிய மழை நீர்
-
மின்சாரம் தாக்கி மாடு பலி
-
விருத்தாசலத்தை மாவட்டமாக அறிவிப்பது குறித்து ஆய்வு சபாநாயகர் பிரபாகர் தகவல்
-
மகளிர் அணியினர் 2 ஆயிரம் பேருக்கு வெள்ளி விளக்கு பரிசளித்தார் தனுஷ்
-
பருவமழை காலத்தில் பயிர் பாதிப்பை தவிர்க்க வேளாண் துறை அறிவுரை