வீட்டில் கள்ள நோட்டு அச்சடிப்பு; கேரளாவில் ரூ.2.50 கோடி சிக்கியது!

8

-நமது நிருபர்-

கேரளாவின் கொல்லம் மாவட்டத்தில் உள்ள கல்லேலிவயல் கிராமத்தைச் சேர்ந்தவர் சிபியன். மாயமான அவரை கண்டுபிடித்து தரும்படி சிபியனின் மனைவி டின்சி, பள்ளித்தோட்டம் போலீசில் கடந்த 16ல் புகார் அளித்தார். விசாரணையில், ஆதர்ஷ் என்பவர் சிபியனை கடத்தியதும், அவரிடம் இருந்த தங்க நகைகளை பறித்ததும் தெரியவந்தது.

அடுத்த சில நாட்களில் தாமாகவே வீடு திரும்பிய சிபியன், நடந்த சம்பவம் குறித்து போலீசாரிடம் தெரிவித்தார். அவரது பேச்சு சந்தேகத்தை ஏற்படுத்தியதை அடுத்து, சிபியனின் வங்கி கணக்குகளை போலீசார் ஆராய்ந்தனர். அதில், 'ஹவாலா' மற்றும் சட்டவிரோத பணப் பரிவர்த்தனைகள் நடத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து, சிபியனின் வீட்டில் போலீசார் சோதனை நடத்தினர்.

அப்போது, 'டிஜிட்டல் பிரிண்டர்', 500 ரூபாய் நோட்டு அளவில் வெட்டப்பட்ட காகித கட்டுகள், நோட்டு எண்ணும் இயந்திரம் உள்ளிட்ட கள்ளநோட்டு தயாரிக்க பயன்படுத்தப்படும் உபகரணங்கள், 45 சவரன் தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டன. இந்த மையத்தில், 2.50 கோடி ரூபாய் கள்ளநோட்டு அச்சடித்ததும் தெரியவந்தது.

ஆற்றிங்கலைச் சேர்ந்த ரவி என்பவரிடம் இருந்து 30 லட்சம் ரூபாய்க்கு இந்த உபகரணங்களை சிபியன் வாங்கியது தெரியவந்ததை அடுத்து, ரவியை தேடும் பணி முடுக்கிவிடப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில், மேலும் சிலருக்கு தொடர்பிருப்பதாக கூறியுள்ள போலீசார், சிபியனிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement