பரமக்குடி ரயில்வே ஸ்டேஷனில் மின்தடையால் பயணிகள் அவதி: தனி 'டிரான்ஸ்பார்மர்'கள் அமைக்க வலியுறுத்தல்
பரமக்குடி: பரமக்குடி ரயில்வே ஸ்டேஷன் 'அம்ரித் பாரத்' திட்டத்தில் ரூ.14 கோடியில் மறு சீரமைக்கப்பட்டுள்ளது. இங்கு ஆண்டிற்கு 9 லட்சம் பயணிகள் வரை பயணிக்கின்றனர். இங்கு மின்பற்றாக்குறையால் அடிக்கடி மின் தடையால் பயணிகள் இரவுநேரத்தில் இருட்டில் சிரமப்படுகின்றனர். தனியாக 'டிரான்ஸ்பார்மர்'கள் அமைக்க ரயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பரமக்குடி: மதுரை - ராமேஸ்வரம் மார்க்கத்தில் பரமக்குடி ரயில்வே ஸ்டேஷன் என்.எஸ்.ஜி., 4 வகையைச் சேர்ந்தது. இங்கு ஆண்டிற்கு 9 லட்சம் பயணிகள் வரை பயணிக்கும் நிலையில் ஆண்டு வருமானம் ரூ.11 கோடிக்கும் மேல் உள்ளது. இங்கு தினந்தோறும் 12 ரயில்களும், 18 முறை வார ரயில்களும் நின்று செல்கிறது. இந்நிலையில் 3 பிளாட்பார்ம்கள், நடைமேடை பாலம், பிரம்மாண்ட நுழைவு வாயில், எல்.இ.டி., ஸ்கிரீன்கள், லிப்ட் வசதி செய்யப்
பட்டுள்ளது.
இதன்படி போதிய அளவில் மின் விளக்கு வசதி செய்யப்பட்டுள்ள நிலையில், இரவு நேரங்களில் மின் பற்றாக்குறை என்பது அதிகரித்துள்ளது.
இதனால் தாம்பரம், சேது எக்ஸ்பிரஸ் செல்லும் நேரங்களில் பயணிகள் இருளில் காத்திருக்கும் நிலை உள்ளது. இங்கு ஒட்டுமொத்தமாக டிரான்ஸ்பார்மர் பழுதடையும் நிலையில் ரயில்களுக்கான சிக்னலிலும் பாதிப்பு ஏற்பட்டு ரயில் சேவையும் தாமதமாகும் என அலுவலர்கள் தெரிவிக்கின்றனர். எனவே பரமக்குடி ரயில்வே ஸ்டேஷனுக்கு என தனியாக 'டிரான்ஸ்பார்மர்'கள் அமைத்து முறையான மின் வசதியை ஏற்படுத்த ரயில்வே அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.