வேலை உறுதி திட்ட பணிகளை நிறுத்த எதிர்பார்ப்பு : விவசாய பணிக்கு உதவ விவசாயிகள் வேண்டுகோள்

திருப்புவனம்: விவசாய பணிகள் துவங்கியதால், 3 மாதங்களுக்கு வேலை உறுதி திட்ட பணிகளை நிறுத்தி வைத்து, விவசாயம் செழிக்க உதவ வேண்டும் என விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.
-வடகிழக்கு பருவ மழையை நம்பி சம்பா பருவ சாகுபடி நடந்து வருகிறது. வைகை ஆற்றை நம்பி திருப்புவனம் வட்டாரத்தில் 4,000 எக்டேரில் நெல் விவசாயம் நடக்கும். செப்., முதல் நாற்றங்கால் தயார் செய்வது, வாய்க்கால்களை சீர் செய்வது, வரப்பு வெட்டும் பணிகள் நடைபெறும்.

நாற்று வளர்ந்த பின் அதனை பறித்து நடவு செய்வது, மருந்து தெளிப்பது, களை எடுக்க விவசாய கூலி தொழிலாளர்கள்
அவசியம். கடந்த 2011ல் 18 ஆயிரத்து 222 விவசாய கூலி தொழிலாளர்கள் இருந்தனர். தற்போது 50 சதவிகிதம் வரை குறைந்து விட்டனர். இதனால்
விவசாய பணிகள் துவக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
நாற்று நடவு செய்யும் பணியில் ஏக்கருக்கு 10 பேர் வீதம் ஈடுபடுவார்கள். ஏக்கருக்கு ரூ.3,000 (பத்து பேருக்கும் சேர்த்து) வழங்கப்படும். வெளியூர் நபர்களுக்கு வண்டி வாடகை ரூ.1,000
கூடுதலாக வழங்க வேண்டும்.

தற்போது வேலை உறுதி திட்டபணிகள் திருப்புவனம் வட்டார அளவில் நடந்து வருவதால் விவசாய கூலி வேலைக்கு ஆட்கள் கிடைப்பது சிரமமாக உள்ளது. கண்மாய்களில் போதிய நீரின்றி மோட்டார் மூலம் விவசாய பணிகள், கட்டமன்கோட்டை, கொந்தகை, திருப்பாச்சேத்தி, மழவராயனேந்தல் பகுதியில் துவங்கியுள்ளன. பெரும்பாலான பகுதிகளில் நேரடி விதைப்பு , காய்கறி சாகுபடி என மாறி விட்டனர். திருப்புவனம் வட்டாரத்தில் கண்மாய் கரை, கால்வாய் சீரமைப்பு என குறைந்தது 50 முதல் 75 பேர் வரை பணிபுரிகின்றனர்.
இது குறித்து விவசாயிகள் கூறியதாவது, தனியாக நில உரிமையாளர்களே விவசாய பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். நடவு காலமான செப்., முதல் டிச., வரை வேலை உறுதி திட்ட பணிகளை நிறுத்தினால் தான், நடவு பணிகளுக்கு தினக்கூலி ஆட்கள் வருவார்கள். அவர்களின்றி விவசாயம் செய்வது கடினமாக உள்ளது. குறிப்பிட்ட பணிக்கு மட்டுமே இயந்திரங்கள் பயன்படுத்த முடியும். மற்ற பணிகளுக்கு ஆட்கள் மூலம் மேற்கொண்டால் தான் விளைச்சல் கிடைக்கும். வயல்களில் விவசாயம் நடத்தாவிடில் நிலங்களில் முட்புதர்கள் வளர்ந்து விடும். இதற்காகவே விவசாயத்தை தொடர்ந்து செய்து வருகிறோம் என்றனர்.

Advertisement