புயல் எச்சரிக்கையால் கடலுக்கு செல்லாத மீனவர்கள் கரையோரங்களில் ஓய்வெடுக்கும் மீன்பிடி படகுகள்
பழவேற்காடு: புயல் எச்சரிக்கையை தொடர்ந்து, கடலில் மீன் பிடிக்க தடை விதிக்கப்பட்ட நிலையில், மீனவர்கள் கடலுக்கு செல்லாததால், மீன்பிடி படகுகள் கரையோரங்களில் ஓய்வெடுத்து வருகின்றன.
தென்கிழக்கு மற்றும் மத்திய கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில், காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது.
அது புயலாக மாறி, இம்மாதம் 28 மற்றும் 29ம் தேதிகளில், ஆந்திர மாநிலத்தில் கரையை கடக்க வாய்ப்பு உள்ளதாக, வானிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது.
அதை தொடர்ந்து, திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள மீனவர்கள், மறு அறிவிப்பு வரும் வரை, கடலுக்கு மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என, மீன்வளத்துறை எச்சரிக்கை விடுத்தது.
புயல் எச்சரிக்கையை தொடர்ந்து, நேற்று முதல் மீனவர்கள் மீன்பிடி தொழிலுக்கு செல்வதை தவிர்த்துள்ளனர். இதனால், மீன்பிடி படகுகள் பழவேற்காடு ஏரியின் கரையோரங்களில் ஓய்வெடுத்து வருகின்றன.
மீனவர்களும் தொழிலின்றி வீடுகளில் முடங்கி கிடக்கின்றனர். சில மீனவர்கள் வலைகளை பாதுகாப்பது, சீரமைப்பது உள்ளிட்ட பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.
புயல் கரையை கடக்கும் வரை தொழிலுக்கு செல்ல முடியாத நிலையில், வருவாய் இழப்பிற்கு ஆளாகியுள்ளனர்.
இதுகுறித்து பழவேற்காடு சுற்றுப்பகுதி மீனவர்கள் கூறியதாவது:
மழைக்காலம் முடியும் வரை, அவ்வப்போது இதுபோன்ற மீன்பிடி தடைகள் இருக்கும். வருவாய் இல்லாமல் சிரமப்படுவோம்.
வீட்டில் உள்ள நகைகளை அடமானம் வைத்தும், வெளியில் கடன் வாங்கியும், குடும்ப செலவினங்களுக்கு பயன்படுத்துவோம். மீண்டும் தொழிலுக்கு செல்லும்போது இந்த கடனை அடைப்போம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.