கோயில் நிர்வாகத்திற்கு தனி வாரியம் பிராமணர் சங்கம் வலியுறுத்தல்
திருநெல்வேலி: கோயில் நிர்வாகத்துக்கு தனி வாரியம் அமைக்க வேண்டும் என தமிழ்நாடு பிராமணர் சங்க மாநிலத் தலைவர் நாராயணன் தெரிவித்தார்.
தமிழ்நாடு பிராமணர் சங்க மாநில மாநாடு, நிர்வாகக் குழு, செயற்குழு, பொதுக்குழுக் கூட்டம் திருநெல்வேலியில் நடந்தது. இதில் பல்வேறு மாவட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.
கூட்டத்தில், பொருளாதாரத்தில் பின்தங்கிய முற்பட்ட வகுப்பினருக்கு 10 சதவீத இடஒதுக்கீட்டை அமல்படுத்த வேண்டும்; முற்பட்டோர் நலவாரியம் அமைக்க வேண்டும்; கோயில் நிர்வாகத்துக்கு தனி வாரியம் அமைக்க வேண்டும்; அர்ச்சகர்களுக்கு முறையான ஊதியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
பின்னர் நாராயணன் கூறியதாவது:
மதச்சார்பின்மை பேசும் அரசு ஹிந்து கோயில்களை மட்டும் நிர்வகிப்பது சரியல்ல. இஸ்லாமிய, கிறிஸ்தவ வழிபாட்டுத் தலங்களுக்கு தனி நிர்வாக அமைப்புகள் இருப்பதைப் போன்று, கோயில்களுக்கும் தனி வாரியம் அமைக்க வேண்டும். இதன் மூலம் கோயில் நிர்வாகக் குளறுபடிகளைச் சரிசெய்ய முடியும்.
முதல்வர் ஜோசப் விஜய் ஊழல் மற்றும் லஞ்ச ஒழிப்புக்கு முக்கியத்துவம் அளித்து வருகிறார். அவர் பெரும்பான்மை பலத்துடன் ஆட்சி செய்ய வேண்டும். பெரும்பான்மை இல்லாததால் பல்வேறு அரசியல் கட்சிகள் அவரை மிரட்டி வருகின்றன. தமிழகத்தில் நடக்கவுள்ள 5 சட்டசபை தொகுதி இடைத்தேர்தல்களிலும் த.வெ.க.,வுக்கு முழு ஆதரவு அளிக்கிறோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.