மின்வாரிய அதிகாரிகள் அலட்சியத்தால் கருகிய எலக்ட்ரிக், விவசாய பொருட்கள்
கமுதி: கமுதி அருகே காக்குடி கிராமத்தில் அதிக மின்னழுத்தம் ஏற்பட்டு மோட்டார் அறையில் இருந்த எலக்ட்ரிக், விவசாய பொருட்கள், சி.சி.டி.வி., கேமரா எரிந்து சேதமடைந்தன.
கமுதி அருகே காக்குடி,வல்லந்தை உள்ளிட்ட கிராமங்களில் விவசாய நிலத்தில் நடப்பட்டுள்ள மின்கம்பத்தின் வழியாக மின்மோட்டோர்களுக்கு மின் வினியோகம் செய்யப்படுகிறது. 10 நாட்களுக்கு முன்பு மின்கம்பத்தில் மின்மாற்றி உடைந்து சேதமடைந்துள்ளது. இதுகுறித்து மின்வாரிய அதிகாரிகளுக்கு புகார் அளிக்கப்பட்டது. ஆனால் தற்போது வரை சரி செய்யப்படவில்லை.
காக்குடி கிராமத்தில் உயர்அழுத்த மின்கம்பிகள் ஒன்றோடு ஒன்று உரசி அதிக மின்னழுத்தம் ஏற்பட்டு விவசாயி மருது வயலில் மோட்டர் அறையில் இருந்த எலக்ட்ரிக் பொருட்கள், தண்ணீர் பைப்கள்,தளவாடபொருட்கள், கேமரா எரிந்துவிட்டன. அறையில் யாரும் இல்லாததால் உயிர்சேதம் தவிர்க்கப்பட்டது. மின்வாரிய அதிகாரிகள் அலட்சியத்தால் ரூ.ஒரு லட்சம் மதிப்பிலான பொருட்கள் சேதம் அடைந்துள்ளது. எனவே மின்னழுத்தத்தை சரி செய்யவும், பாதிக்கப்பட்ட விவசாயிக்கு உரியஇழப்பீடு வழங்க முன்வர வேண்டும்.