பஜார் பகுதியில் நாற்று நடும்போராட்டம் நடத்த முடிவு

ராமநாதபுரம்: ராமநாதபுரம் பஜார் பகுதியில் உள்ள சேறும், சகதியுமான ரோட்டில் நாற்று நடும் போராட்டம் நடத்தப்படும் என பெரியார் பேரவை நிர்வாகி நாகேசுவரன் தெரிவித்துள்ளார்.

அவர் கூறியதாவது: ராமநாதபுரம் நகர் பகுதி முழுவதும் சாக்கடை குட்டையாக காணப்படுகிறது. கழிவுநீர் தேங்கி, சேறும் சகதியுமாக, நடக்க முடியாத நிலையில் உள்ளது. இது சுகாதார கேட்டின் உச்சகட்ட அவலம். இதனால் நோய் பரவும் அபாயம் உள்ளது. நகராட்சி ஆணையர், சுகாதார மேற்பார்வையாளர் பணியில் இருக்கிறாரா? இல்லை சம்பளத்தை மட்டும் வாங்கிக்கொண்டு சந்தோஷமாக இருக்கிறாரா? அதேபோல் புதிய பஸ் ஸ்டாண்டில் இருந்து கலெக்டர் அலுவலகம் வரை சாலைகள் குண்டும் குழியுமாக காணப்படுகிறது. தினமும் ஒரு விபத்து நடக்கிறது. இந்த வழியாக காரில் செல்லும் கலெக்டருக்கும், நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளுக்கும் இது தெரியாதா. இதை சரிசெய்யவில்லை என்றால் ரோட்டில் ஜல்லி கற்கள் நிரப்பும் போராட்டமும், கழிவுநீர் தேங்கி சேறும் சகதியுமாக உள்ள பஜார் பகுதியில் நாற்று நடும் போராட்டமும் நடத்தப்படும் என்றார்.

Advertisement