பச்சையம்மன் கோவில் கும்பாபிஷேக விழா

கள்ளக்குறிச்சி: உலகங்காத்தான் கிராமத்தில் பச்சையம்மன், புலிமுக கருப்பையா கோவில் கும்பாபிஷேக விழா இன்று (அக்.,25) நடந்தது.

உலகங்காத்தான் கிராமத்தில் உள்ள விநாயகர், பச்சையம்மன், புலிமுகத்து கருப்பையா, பூமலையப்பா, முனீஸ்வரர், ஆஞ்சநேயர் கோவில் கும்பாபிஷேக விழா கடந்த 17ம் தேதி காப்பு கட்டுதலுடன் துவங்கியது. தொடர்ந்து, தினமும் சுவாமிக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை நடந்தது.

கடந்த 24ம் தேதி விக்னேஸ்வர பூஜை, கணபதி ஹோமம் மற்றும் யாகசாலை பூஜை நடந்தது. இன்று காலை கோ பூஜை, சூர்ய கும்ப பூஜை, வேதபாராயணம் நாடி சந்தானம் உள்ளிட்டவைகளைத் தொடர்ந்து, கலச புறப்பாடு நடந்தது.

காலை 10:15 மணியளவில் கோவில் கலசம் மற்றும் சுவாமிகளுக்கு புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடந்தது. திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.

Advertisement