கரடிக்கு கடிவாளம் தேவை பொங்கி எழுந்த மக்கள்

கோத்தகிரி: கோத்தகிரி பஜார் ஐய்யப்பன் கோவிலுக்குள் புகுந்து அட்டகாசம் செய்து வரும் கரடியை, கூண்டு வைத்து பிடிக்க வேண்டும். என, மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

கோத்தகிரி பஜார் பகுதி குடியிருப்புகள் நிறைந்துள்ளன. தவிர, அரசு மருத்துவமனை, காவல் நிலையம், பள்ளிவாசல், மற்றும் கோவில்கள் அமைந்துள்ளதால், மக்கள் நடமாட்டம் அதிகரித்து காணப்படுகிறது. கடந்த சில நாட்களாக இப்பகுதியில், கரடி நடமாட்டம் இருந்து வருவதுடன், சாலையில் நடந்து செல்பவர்களை துரத்தும் சம்பவங்களும் தொடர்கிறது.

இந்நிலையில், நேற்று அதிகாலை பஜார் பகுதியில் பூட்டப்பட்டிருந்த ஐய்யப்பன் கோவிலினுள் நுழைந்த கரடி, எண்ணெய் மற்றும் பூஜை பொருட்களை சேதப்படுத்தி உள்ளது. பிறகு, அங்கிருந்து வெளியேறிய கரடி, அப்பகுதியில் உள்ள பேக்கரி கடையை உடைத்து உள்ளே புகுந்து பொருட்களை சேதப்படுத்தி விட்டு, அருகில் இருந்த புதருக்குள் சென்றுள்ளது.

இதனை காரில் அமர்ந்திருந்த இளைஞர்கள், தங்களது மொபைல் போனில் வீடியோ பதிவு செய்து, சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளனர். பகுதி மக்கள் கூறுகையில், ‘இரவு, பகல் நேரங்களில் கரடியின் நடமாட்டம் உள்ளது. இதனால், மக்கள் அச்சமடைந்துள்ளனர். அசம்பாவிதம் நடப்பதற்கு முன்பு, வனத்துறையினர் கூண்டு வைத்து கரடியை பிடித்து, அடர்ந்த வனப்பகுதியில் விட வேண்டும். இல்லாத பட்சத்தில் போராட்டம் நடத்தப்படும்.’ என்றனர்.

Advertisement