ஆயிரக்கணக்கான ஏக்கர் நெற்பயிர்கள் நீரில் மூழ்கின

புதுச்சேரி: திருக்கனுார் மற்றும் அதை சுற்றியுள்ள கிராமங்களில் தொடர் கனமழை காரணமாக சம்பா பருவத்தில் சாகுபடி செய்யப்பட்ட ஆயிரக்கணக்கான ஏக்கர் நெற்பயிர்கள் நீரில் மூழ்கின.

வடகிழக்கு பருவ மழை துவங்கி கடந்த சில தினங்களாக இரவு நேரங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது. இதற்கிடையே, வங்கக் கடலில் உருவாகியுள்ள புதிய காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக புதுச்சேரியின் நகரம் மற்றும் கிராமங்களில் நேற்று (அக்.,24) இரவு முதல் கனமழை பெய்தது.

இதன் எதிரொலியாக, சோரப்பட்டு, செல்லிப்பட்டு, விநாயகம்பட்டு, வம்புப்பட்டு, செட்டிப்பட்டு, கூனிச்சம்பட்டு, கொடாத்துார் உள்ளிட்ட கிராமங்களில் சம்பா பருவத்தில் ஆயிரம் ஏக்கருக்கு மேல் விவசாயிகள் சாகுபடி செய்திருந்த நெற்பயிர்கள் முழுதும் நீரில் மூழ்கின.

இதனால், மகசூல் பாதிக்கம் என்பதால், இப்பகுதி விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.

ஆகையால், தொடர் மழையால் தண்ணீரில் மூழ்கி பாதிக்கப்பட்ட நெற்பயிர்களை வேளாண் அதிகாரிகள் உடனடியாக பார்வையிட்டு, நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement