இடிந்து விழும் நிலையில் தீயணைப்பு வீரர்கள் குடியிருப்பு

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி தீயணைப்பு வீரர்கள் குடியிருப்பு இடிந்து விழும் நிலையில் பலவீனமாக இருப்பதால் குடியிருப்போர் அச்சமடைந்துள்ளனர்.

கள்ளக்குறிச்சி, கச்சிராயபாளையம் சாலையில் உள்ள தீயணைப்பு நிலையம் பின்புறம் காவலர் வீட்டு வசதி கழகம் சார்பில் தீயணைப்பு வீரர்கள் குடியிருப்பு கடந்த 2008ம் ஆண்டு டிசம்பர் 4ம் தேதி திறக்கப்பட்டது. 4 பகுதிகளாக மொத்தம் 24 வீடுகள் உள்ள இந்த கட்டடங்கள் அனைத்தும் பின் பக்கத்தில் சிமென்ட் காரைகள் பெயர்ந்தும், புதர்கள் மண்டியும் உடைந்து விழும் நிலையில் உள்ளது. இதனால், அங்கு குடியிருப்போர் அச்சத்தில் உள்ளனர்.

அத்துடன் இங்கு நகராட்சி சார்பில் அமைக்கப்பட்டுள்ள குடிநீர் வசதியும் தினசரி வழங்கப்படுவதில்லை. இதனால் அங்கு அமைக்கப்பட்டுள்ள போர் வெல் மூலமாக தண்ணீர் ஏற்றி நீர்த்தேக்க தொட்டிகளில் சேகரித்து வழங்கப்படுகிறது.

ஆனால் இதில் சொற்ப அளவிலேயே தண்ணீர் கிடைப்பதால், அங்கு வசிப்பவர்கள் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர். கோடை காலங்களில் தண்ணீர் இல்லாமல் இருப்பதால், இங்குள்ள பெரும்பாலான வீடுகள் பூட்டிக் கிடக்கிறது.

எனவே இடிந்து விழும் நிலையில் பலவீனமான கட்டடத்தை இடித்து அகற்றி விட்டு புதிதாக கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

Advertisement