சாலையில் சூழ்ந்த மழைநீர் போக்குவரத்து பாதிப்பு

குள்ளஞ்சாவடி: குள்ளஞ்சாவடி - ஆலப்பாக்கம் சாலையில் மழைநீர் சூழ்ந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது

குள்ளஞ்சாவடியில் இருந்து ஆலப்பாக்கம் செல்லும் பிரதான சாலையில், ஏராளமான கிராமங்கள் அமைந்துள்ளன. இந்த சாலை வழியாக ஆலப்பாக்கம், புதுச்சத்திரம், கடலுார், சிதம்பரம் உள்ளிட்ட பகுதிகளுக்கு கிராம மக்கள் சென்று வருகின்றனர். பெரிய அளவில் பஸ் போக்குவரத்து இல்லை என்றாலும், கார், பைக் உள்ளிட்ட வாகனங்கள் செல்லும் பாதையாக இவ்வழி உள்ளது.

இங்கு நேற்று முன்தினம் நள்ளிரவு முதல், நேற்று காலை தாண்டியும் கனமழை பெய்தது. இதனால் இந்த சாலையில் மழைநீர் சூழ்ந்து வெள்ளக்காடானது.

இவ்வழியாக சென்ற கார், பைக் உள்ளிட்ட வாகனங்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டன. போக்குவரத்து பாதிக்கப்பட்டதால் வாகன ஓட்டிகளுக்கு சிரமம் ஏற்பட்டது.

சாலையின் அருகில் உள்ள மழைநீர் கால்வாய்கள், வாய்க்கால்கள் ஆக்கிரமிப்புகளின் பிடியில் இருப்பதாலும், சரி வர துார்வாரப்படாமல் இருப்பதாலும், சாலை மழை நீரில் மூழ்கியதாக சுற்றுப்பகுதி கிராமவாசிகள் புகார் தெரிவித்தனர்.

Advertisement