பருவமழையில் பாதிப்பிற்குள்ளாகும் 239 இடங்கள் முன்னேற்பாடு பணிகள் தீவிரம்

கடலுார்: மாவட்டத்தில் பாதிப்பிற்குள்ளாகும், 239 இடங்களில், முன்னேற்பு பணிகள் தீவிரம் அடைந்துள்ளன.

கடலுார் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு, பாதிப்பு ஏற்படக்கூடிய பகுதிகளை கண்காணித்தல், மீட்பு, நிவாரணம் மற்றும் மறுசீரமைப்பு பணிகள் மேற்கொள்ளுதல் குறித்து ஆய்வுக் கூட்டம் இன்று (அக்.,25) நடந்தது. கண்காணிப்பு அலுவலர் மோகன் தலைமை தாங்கினார். கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார் முன்னிலை வகித்தார்.

மாவட்ட கண்காணிப்பு அலுவலர் மோகன் பேசியதாவது:

கடலுார் மாவட்டத்தில், மிக அதிகமாக பாதிப்புக்குள்ளாக கூடிய 22 இடங்கள், உட்பட 239 இடங்கள் கண்டறியப்பட்டு, அனைத்து முன்னேற்பாடு பணிகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

முன்னெச்சரிக்கை பணிகள் மேற்கொள்ள மண்டல அலுவலர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். புயல் பாதுகாப்பு மையம், பல்நோக்கு மையம் மற்றும் தற்காலிக தங்குமிடங்களும், அனைத்து அடிப்படை வசதிகளும் தயார் நிலையில் இருப்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும்.

பொது வினியோகத்திற்கு தேவையான பொருட்களை இருப்பில் வைத்து கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும். மண்டல அலுவலர்கள் அந்தந்த பகுதியில் பொதுமக்களிடம் கடந்த காலங்களில் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து அறிந்து, அதற்கேற்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்.

முதல்நிலை பொறுப்பாளர்கள், நீச்சல் தெரிந்த நபர்கள், மரம் வெட்டும் நபர்கள் ஆகியோர்களிடம் ஆலோசனைக்கூட்டம் நடத்தி ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்.

தங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள பகுதிகளில் மழை வெள்ளத்தால் பாதிப்புகள் ஏற்படும் பொழுது முதல்நிலை பொறுப்பாளர்களுடன் ஒருங்கிணைந்து பொதுமக்களை பாதுகாப்பாக தங்க வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கனமழை மற்றும் வெள்ளத்தால் போக்குவரத்து பாதிப்பு ஏற்படும் பட்சத்தில் அதனை சரிசெய்திடவும், மீட்புப் பணிகள் மேற்கொள்ளவும் பொக்லைன் இயந்திரங்கள், மரம் அறுக்கும் இயந்திரங்கள், மணல் மூட்டைகள், சவுக்கு கட்டைகள், ரப்பர் படகுகள், மின் சாதனங்கள் ஆகியவை தயார் நிலையில் இருப்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும். மாவட்டத்தில் உள்ள அனைத்து நீர்நிலைகள் மற்றும் ஆறுகளில் நீர்வரத்து குறித்து அந்தந்த துறை சார்ந்த அலுவலர்கள் தொடர் கண்காணிப்பில் இருக்க வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

இக்கூட்டத்தில் டி.ஆர்.ஓ., புண்ணியகோட்டி, கமிஷ்னர் கிஷன்குமார், ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குனர் பாலகணேஷ், நேர்முக உதவியாளர் (பொது) செல்வம் உட்பட அனைத்து துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Advertisement