'மண்புழு உரம் விற்பனையில் ஓராண்டு லாபம் ரூ.16 லட்சம்!'

மண்புழு உரம் உற்பத்தி செய்து, இணையதளம் வாயிலாக விற்பனை செய்து, நல்ல வருமானம் ஈட்டி வரும், ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த பொறியியல்

பட்டதாரியான, 33 வயது சவுந்தர்ராஜ்:

எங்களுக்கு 5 ஏக்கரில் விவசாய நிலம் இருக்கிறது. விவசாய பயன்பாட்டுக்காகவும், பால் தேவைக்காகவும் நாட்டு மாடுகளை வளர்த்து வந்தோம். அப்பா, அந்த மாடுகளின் சாணத்தை பயன்படுத்தி நிலக்கடலை, வெங்காயம்

சாகுபடி செய்து வந்தார்.

நான் தானியங்கி வாகன பொறியியல் பட்டப்படிப்பு முடித்துவிட்டு, வேலை தேடி கோவைக்கு சென்று விட்டேன். கிடைத்த சிறு சிறு வேலைகளை செய்து சலிப்பாகி, சொந்த தொழில் செய்யும் ஆசையில் ஊர் திரும்பி விட்டேன். இயற்கை விவசாயத்தில் ஆர்வம் அதிகமாகவே, மண்புழு உரம் தயார் செய்து, எங்கள் நிலத்தில் பயன்படுத்த ஆரம்பித்தேன்.

அதன்பின் தமிழகம், கேரளா, ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களில் மண்புழு உரத்துக்கு நல்ல வரவேற்பு இருப்பதை அறிந்து, அதையே தொழிலாக

செய்யலாம் என்ற யோசனை தோன்றியது.சோதனை முயற்சியாக, 12 அடி நீளம், 4 அடி அகலம், 2 அடி உயரம் கொண்ட, 'வளர்ப்பு படுக்கை' அமைத்து, மண்புழு உரம் தயாரித்து விற்பனை செய்ய ஆரம்பித்தேன்.

நல்ல வரவேற்பு கிடைக்கவே, இப்போது, 1 ஏக்கரில் 100 படுக்கைகள் அமைத்து, ஒரு மாதத்துக்கு, 20 டன் மண்புழு உரம் தயார் செய்கிறேன்.

கீற்று கொட்டகை, நிழல் வலை அமைத்து உரம் தயார் செய்கிறேன்.

பெருச்சாளி, பாம்புகளால் பாதிப்பு ஏற்படாமல் இருக்க, தரையில் இருந்து, 2 அடி உயரம் வரை இரும்பு வலை அமைத்துள்ளேன்.

நாட்டு மாட்டு எருவில் உற்பத்தி செய்யும் மண்புழு உரம் வீரியமாகவும், சத்து அதிகமாகவும் இருக்கும். 2 டன் எரு, தேங்காய் உரிமட்டை, இலை, தழைகள் பயன்படுத்தி, 5 கிலோ மண்புழுக்களை விட்டு பராமரித்தால், 70 நாட்களில்

1 டன் மண்புழு உரம் கிடைக்கும்.

உரம் உற்பத்திக்கு ஆப்ரிக்கன் வகை மண்புழுக்களை தான் பயன்படுத்துகிறேன். ஒரு முறை வாங்கி பயன்படுத்தினால், நாளுக்கு நாள் அதன்

எண்ணிக்கை பெருகியபடியே இருக்கும். 'ஆன்லைன்' வர்த்தக நிறுவனமான, 'இண்டியா மார்ட்' வாயிலாக பல மாநிலங்களில் இருந்தும், 'ஆர்டர்'கள்

வருகின்றன. சமூக வலைதளங்கள் வாயிலாகவும் நிறைய

வாடிக்கையாளர்கள் கிடைத்துள்ளனர்.

ஒரு மாதத்துக்கு 30 டன் மண்புழு உரம் விற்பனை வாயிலாக, 2.70 லட்சம் ரூபாய் கிடைக்கிறது. தவிர, 50 கிலோ மண்புழுக்கள் விற்பனை மூலம்,

30 ஆயிரம் ரூபாய் வருமானம் கிடைக்கிறது.

ஒரு மாதத்துக்கு 3 லட்சம் வீதம், ஆண்டுக்கு 36 லட்சம் ரூபாய் வருமானம் கிடைக்கிறது. எல்லா செலவுகளும் போக, 16 லட்சம் ரூபாய் லாபம்

கிடைக்கிறது.

தொடர்புக்கு:

86676 60767.

Advertisement