மதியம் முதல் தொடர்ந்து தட்டியெடுத்த மழை வெள்ளக்காடாக மாறிய தார் சாலைகள்
கோவை:பகலில் துவங்கி இரவு முழுவதும் பெய்த கனமழையால் கோவை
நகரம் வெள்ளக்காடாக மாறியது.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமாக பெய்து வருகிறது. கடந்த, 15ம் தேதி முதல் கோவை மற்றும் அதன் சுற்று வட்டாரப்பகுதிகளில் தொடர்ந்து பெய்து வருகிறது. நேற்று கோவை நகரப்பகுதியில் பெய்த கனமழையால் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் வாகனங்கள் செல்ல முடியாமல் போக்குவரத்து ஸ்தம்பித்தது.
காந்திபுரம் பஸ் ஸ்டாண்டு, 100 ரோடு, அவிநாசி ரோடு, ரயில்வே ஸ்டேஷன் லங்கா கார்னர், அரசு மருத்துவமனை வளாகம், வடகோவை, உக்கடம், பெரிய கடைவீதி, டி.கே.மார்க்கெட் மற்றும் பூமார்க்கெட் உள்ளிட்ட பல பகுதிகளில் மழைநீர் முழங்கால் அளவுக்கு தேங்கி நின்றது.
லங்கா கார்னர் மற்றும் அங்குள்ள ரயில்வே பாலத்தின் அடியிலும், அவிநாசி மேம்பாலம், வடகோவை மேம்பாலம் மற்றும் கிக்கானி பள்ளியில் அருகில் உள்ள ரயில்வே மேம்பாலம் அடியிலும் மழைநீர் தேங்கி இருந்ததால், வாகனங்கள் வேறு வழியின்றி ஆங்காங்கே நின்றன.
நேற்று ஞாயிறு என்பதால், தீபாவளி பர்ச்சேஸ் செய்ய கடைவீதிக்கு வந்திருந்த பொதுமக்கள், பர்ச்சேஸ் முடிந்தும் ஜவுளிக்கடைகளை விட்டு வெளியே வரமுடியாமல் தவித்தனர்.பல இடங்களில் சாலை ஓரங்களில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த வாகனங்கள் மழைநீரில் மூழ்கின. ரோட்டோரங்களில் இருந்த பள்ளங்களில் மழைநீர் நிரம்பி இருந்தது.
மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட லங்கா கார்னர், ஆத்துப்பாலம், அவிநாசி மேம்பாலம், வின்சென்ட் ரோடு, சிரியன் சர்ச் ரோடு, ரேஸ்கோர்ஸ் உள்ளிட்ட பகுதிகளுக்கு நேரில் சென்ற மாநகராட்சி கமிஷனர் ரவி தேஜா, மழைநீர் தேங்கி உள்ள இடங்களில் நீரை அகற்றவும், பள்ளங்களை சரி செய்யவும் உத்தரவிட்டார்.
மாவட்ட நிர்வாகம் எச்சரிக்கை
கனமழை காரணமாக கோவைக்கு ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கும் அபாயம் உள்ளதால் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். கனமழையின் போது தேவையற்ற பயணங்களைத் தவிர்க்க வேண்டும். சாலைகளில் மழைநீர் தேங்கியுள்ள பகுதிகளிலும், நீர்நிலைகளின் அருகிலும் பாதுகாப்பாக இருக்க வேண்டுமென மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
ஜி.எச்.வளாகத்தில் வெள்ளம்
கோவை அரசு மருத்துவமனை வளாகம் முழுவதும் மழை நீர் தேங்கியதால் நோயாளிகள் அவதிப்பட்டனர். குறிப்பாக, எம்.எம்.2 வார்டு உள்ளிட்ட சில சிகிச்சை பிரிவுகளில் நீர் தேங்கியதால் நோயாளிகள், செவிலியர்கள்
அவதிக்கு ஆளாகினர். தற்காலிமாக நோயாளிகளை வேறு வார்டுக்கு
மாற்றினர். மழை நீரை வெளியேற்றும் பணியில் மருத்துவமனை நிர்வாகம் ஈடுபட்டது.






மேலும்
-
'அர்னாப்' புயலால் ஒடிஷாவில் கனமழை: தனித் தீவுகளாக மாறியது 300 கிராமங்கள்
-
ஸ்பெயினில் வெடித்தது போராட்டம்; ரயில் விபத்தைத் தொடர்ந்து அமைச்சர் பதவி விலக மக்கள் வலியுறுத்தல்
-
ஜனநாயகத்துக்கு ஆபத்து; நக்சல் வீடியோ தொடர்பாக நடிகர் நசிருதீன் ஷாவுக்கு மத்திய அமைச்சர் பதிலடி
-
வழக்கை ரத்து செய்யக்கோரிய மகேஷ் மனு நவம்பர் 10க்கு விசாரணை தள்ளிவைப்பு
-
ஆய்வு கூட்டங்களுக்கு வரும் பெண் எம்.எல்.ஏ.,வின் கைக்குழந்தையை கவனிப்பதா அரசு ஊழியர் வேலை?
-
'டேப்' ஒட்டிய விமான ஜன்னல்; பாதுகாப்பில் அலட்சியத்தை கண்டு ஸ்பைஸ்ஜெட் விமான பயணி ஆவேசம்