கரும்புக்கான நிலுவை தொகை வழங்க விவசாயிகள் கோரிக்கை

நாமக்கல்:தமிழகத்தில், கடந்த, தி.மு.க., ஆட்சியில், சர்க்கரை ஆலைகளுக்கு அரவைக்கு அனுப்பிய கரும்பு விவசாயிகளுக்கு, ஆதார விலையுடன், ஊக்கத்தொகையும் சேர்த்து டன் ஒன்றுக்கு, 4,000 ரூபாய் என, விலை நிர்ணயம் செய்யப்பட்டது.

இந்த அறிவிப்பு, 2024--25ம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையின்போது வேளாண் மற்றும் உழவர் நலத்துறை மானிய கோரிக்கையில் வெளியிடப்பட்டது. ஆனால், பல மாதங்களாகியும் இதற்கான அரசாணை வெளியிடாமல் நிலுவையில் உள்ளது.இதையடுத்து, ஆட்சி பொறுப்பேற்ற, த.வெ.க., அரசு, கடந்த ஆட்சியில் அறிவிக்கப்பட்ட இந்த திட்டத்தை நடைமுறைக்கு கொண்டு வரும் வகையில் நடவடிக்கை மேற்கொண்டது. சர்க்கரை ஆலைகளுக்கு கரும்பு வழங்கிய விவசாயிகளின் நலனை கருத்தில் கொண்டு, 2025-26ம் ஆண்டு கரும்பு அரவை பருவத்திற்கு விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்யப்பட்ட கரும்புக்கு, டன் ஒன்றுக்கு ஊக்கத்தொகையுடன் சேர்த்து, 4,000 ரூபாய் வழங்கப்படும் என, கடந்த ஒரு மாதத்திற்கு முன் அரசாணை வெளியிட்டது.
வரும் நவ., 8ல் தீபாவளி பண்டிகை வரவுள்ளதால், விவசாயிகள் பண்டிகையை மகிழ்ச்சியுடன் கொண்டாடும் வகையில் கரும்புக்கான ஊக்கத்தொகையை நிலுவையின்றி வழங்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
இதுகுறித்து, உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடுவின் தமிழக விவசாயிகள் சங்க, மாநில தலைவர் வேலுசாமி வெளியிட்ட அறிக்கையில், 'கரும்பு டன் ஒன்றுக்கு, 4,000 ரூபாய் வழங்குவதற்கான அரசாணை வெளியிட்ட நிலையில், அடுத்த மாதம், 8ல் தீபாவளி பண்டிகை வருகிறது. எனவே, சர்க்கரை ஆலைகளுக்கு கரும்பு அனுப்பிய விவசாயிகள், பண்டிகையை கொண்டாடுவதற்கு உதவும் வகையில், ஊக்கத்தொகை டன் ஒன்றுக்கு, 700 ரூபாய் வீதம் உள்ள நிலுவை தொகையை, த.வெ.க., அரசு உடனடியாக விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement