'அர்னாப்' புயலால் ஒடிஷாவில் கனமழை: தனித் தீவுகளாக மாறியது 300 கிராமங்கள்
புவனேஸ்வர் :
வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுப் பகுதி, புயலாக மாறியது.இதற்கு, 'அர்னாப்' என பெயரிடப்பட்டது. அதி தீவிர புயலாக மாறிய அர்னாப், ஆந்திரா அருகே நேற்று முன்தினம் கரையை கடந்தது.
கடும் சேதம்
பின் வலுவிழந்த புயலாக மாறி ஒடிஷா அருகே நிலைக் கொண்டது. இதனால், ஒடிஷாவில் கடந்த மூன்று நாட்களாக கனமழை பெய்தது. மாநிலம் முழுதும் 17 மாவட்டங்களில் கனமழை கொட்டிய நிலையில், கஞ்சாம் மற்றும் கஜபதி மாவட்டங்கள் கடும் சேதத்தை சந்தித்தன. கஜபதி மாவட்டத்தின் மகேந்திரகிரியில், அதிகபட்சமாக 24 செ.மீ., மழையும், மோகனாவில் 18 செ.மீ., மழையும் பதிவானது. கஞ்சாம் மாவட்டத்தில், 300க்கும் மேற்பட்ட கிராமங்களை வெள்ள நீர் சூழ்ந்துள்ளது. இதனால், அங்குள்ள 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வீடுகளை விட்டு வெளியே வர முடியாத சூழல் நிலவுகிறது. பாதிக்கப்பட்ட பகுதிகளில் தேசிய மற்றும் மாநில பேரிடர் மீட்புப் படையினர் மீட்புப் பணியில் ஈடுபட்டு உள்ளனர். சனகேமுன்டி, அசிகா, கோபால்பூர் ஆகிய பகுதிகளில் சிக்கியுள்ள கிராம மக்களை ஹெலிகாப்டர் வாயிலாக மீட்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
உயிரிழப்பு தவிர்ப்பு
இது குறித்து ஓடிஷாவின் தலைமைச் செயலர் அனு கார்க் கூறுகையில், “300க்கும் மேற்பட்ட கிராமங்களில் சிக்கியவர்களை ஹெலிகாப்டர் வாயிலாக மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்காக கடலோர காவல்படையின் உதவியை நாடியுள்ளோம். மழை தொடர்வதால் மீட்புப் பணியில் தொய்வு ஏற்பட்டுள்ளது,” என்றார்.
அர்னாப் புயல் கரையை கடப்பதற்கு முன்பாகவே, தாழ்வான மற்றும் ஆபத்தான பகுதிகளில் இருந்த 48 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள், பாதுகாப்பான புயல் நிவாரண முகாம்களுக்கு மாற்றப்பட்டதால் உயிரிழப்பு தவிர்க்கப்பட்டது. அர்னாப் புயலால் ஏற்பட்ட பாதிப்புகளை சமாளிக்க, ஒடிஷா அரசுக்கும், பிற மாநிலங்களுக்கும் தேவையான அனைத்து உதவிகளையும் வழங்குவதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா உறுதியளித்துள்ளார். இதை, ஒடிஷா முதல்வர் மோகன் சரண் மஜி உறுதி செய்துள்ளார்.
மேலும்
-
ஸ்பெயினில் வெடித்தது போராட்டம்; ரயில் விபத்தைத் தொடர்ந்து அமைச்சர் பதவி விலக மக்கள் வலியுறுத்தல்
-
ஜனநாயகத்துக்கு ஆபத்து; நக்சல் வீடியோ தொடர்பாக நடிகர் நசிருதீன் ஷாவுக்கு மத்திய அமைச்சர் பதிலடி
-
வழக்கை ரத்து செய்யக்கோரிய மகேஷ் மனு நவம்பர் 10க்கு விசாரணை தள்ளிவைப்பு
-
ஆய்வு கூட்டங்களுக்கு வரும் பெண் எம்.எல்.ஏ.,வின் கைக்குழந்தையை கவனிப்பதா அரசு ஊழியர் வேலை?
-
'டேப்' ஒட்டிய விமான ஜன்னல்; பாதுகாப்பில் அலட்சியத்தை கண்டு ஸ்பைஸ்ஜெட் விமான பயணி ஆவேசம்
-
நாக்பூரில் வென்று கணக்கை துவக்கியது காங்கிரஸ்: கர்நாடகா, உ.பி., மேல்சபை தேர்தலில் பா.ஜ., ஆதிக்கம்