வழக்கை ரத்து செய்யக்கோரிய மகேஷ் மனு நவம்பர் 10க்கு விசாரணை தள்ளிவைப்பு

6

- நமது நிருபர்-

முந்தைய தி.மு.க., ஆட்சியில், தனியார் பள்ளிகளுக்கு நிரந்தர அங்கீகாரம் உள்ளிட்ட பிற சட்டப்பூர்வ அனுமதிகளை பெற்றுத் தருவதாக கூறி, தனியார் பள்ளி நிர்வாகிகளிடம் இருந்து பணம் வசூலித்து மோசடி செய்ததாக, தி.மு.க., நிர்வாகியும், தமிழக தனியார் பள்ளிகள் சங்கத்தின் தலைவருமான அரசகுமார், முன்னாள் அமைச்சர் மகேஷ் உள்ளிட்டோருக்கு எதிராக, சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி, முன்னாள் அமைச்சர் மகேஷ் மனு தாக்கல் செய்தார். இந்த மனு, நீதிபதி வி.லட்சுமிநாராயணன் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழக அரசின் தலைமை குற்றவியல் வழக்கறிஞர் ஜான் சத்யன் ஆஜராகி, ''மனுதாரர் மகேஷ் கைது செய்யப்பட்டு உள்ளார். அவரை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி, சிறப்பு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டு உள்ளது. தலைமறைவாக இருந்த முன்னாள் எம்.எல்.ஏ., முத்துகுமார், சிறப்பு நீதிமன்றத்தில் சரண் அடைந்துள்ளார்,'' என்றார்.

மகேஷ் தரப்பில், மூத்த வழக்கறிஞர் வில்சன், வழக்கறிஞர் ரிச்சர்ட் வில்சன் வாதாடியதாவது: மனுதாரரின் முன்ஜாமின் மனுவை தள்ளுபடி செய்து, இந்த நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்த பின், அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து ஆலோசித்த போது, மூன்று வாகனங்களில் வந்த, 40க்கும் மேற்பட்ட போலீசார், என் அலுவலகத்துக்குள் அத்துமீறி நுழைந்து மகேஷை கைது செய்தனர். எனவே, கைது நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு முன், காவல் துறையினர் பின்பற்ற வேண்டிய நிலையான செயல்பாட்டு நடைமுறைகளை, நீதிமன்றம் வகுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் வாதாடினர்.

அதைத்தொடர்ந்து, தன் அலுவலகத்தில் பொருத்தப்பட்ட, 'சிசிடிவி' பதிவு காட்சிகளை, நீதிபதியிடம் மூத்த வழக்கறிஞர் வில்சன் காண்பித்தார்.

அதற்கு, தலைமை குற்றவியல் வழக்கறிஞர் ஜான் சத்யன் மற்றும் கூடுதல் அரசு குற்றவியல் வழக்கறிஞர் அருண் அன்புமணி ஆஜராகி, 'மூத்த வழக்கறிஞர் அலுவலகத்தின் வெளியே ஒன்றரை மணி நேரம் காத்திருந்து தான், மனுதாரர் மகேஷை கைது செய்தனர். மனுதாரரை வெளியே வரச்சொல்லி தான், அவரை போலீசார் கைது செய்தனர்' என்றனர்.

அப்போது குறுக்கிட்ட நீதிபதி, 'வழக்கறிஞரின் அலுவலகத்தினுள் கைது செய்ததாக கூறப்படும் குற்றச்சாட்டை, சிறப்பு நீதிமன்றம் நிராகரித்து உள்ளது' என்று சுட்டிக்காட்டினார். மகேஷ் தரப்பில், 'சிறப்பு நீதிமன்ற உத்தரவை எதிர்த்து, மனு தாக்கல் செய்ய உள்ளோம்' என, தெரிவிக்கப்பட்டது. வீடியோ ஆதாரங்களுடன் மனுத்தாக்கல் செய்ய அறிவுறுத்திய நீதிபதி, வழக்கை ரத்து செய்யக்கோரி மகேஷ் தாக்கல் செய்த மனு மீதான விசாரணையை, நவ., 10ம் தேதிக்கு தள்ளிவைத்தார்.

Advertisement