உ.பி.,யில் சோகம்: சிலை ஊர்வலம் மீது அதிவேகமாக மோதிய கார்; 3 சிறுமிகள் உள்பட 4 பேர் உயிரிழப்பு!

லக்னோ: உத்தரப்பிரதேச மாநிலம் ஃபெரோசாபாத் மாவட்டத்தில், பாரம்பரியத் திருவிழாவின்போது சிலைகளைக் கரைக்கச் சென்ற ஊர்வலம் மீது அதிவேகமாக வந்த கார் மோதிய விபத்தில் மூன்று சிறுமிகள் உட்பட நான்கு பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.** மேலும் பலர் காயமடைந்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

விபத்து நடந்தது எப்படி

அக்.,25 ஞாயிற்றுக்கிழமை மாலை 8:30 மணியளவில், ஃபெரோசாபாத் மாவட்டம் ஷிகோஹாபாத் - படேஸ்வர் சாலையில் உள்ள நாசிர்ப்பூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சத்தன்புரா கிராமத்திற்கு அருகில் இந்த கோர விபத்து நிகழ்ந்துள்ளது.
மேற்கு உத்தரப்பிரதேசத்தின் சில பகுதிகளில் கொண்டாடப்படும் பாரம்பரியத் திருவிழாவான 'தேஷு-ஜான்ஜி' என்ற சிலைகளைக் கரைக்கும் சடங்கில் மக்கள் குழுவாக ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த அதிவேகக் கார் திடீரென அவர்கள் மீது மோதியது.

உயிரிழந்தவர்கள் விவரம்:

இந்த விபத்தில் உயிரிழந்தவர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்: அஞ்சலி (வயது 15)
ஆஷா (வயது 15), பப்ளி (வயது 17) ,ஹரிஷ் குமார் (வயது 25) ஆகியோர் பரிதாபமாக உயிரிழந்தனர்

போலீசார் அளித்த தகவலின்படி, உயிரிழந்தவர்களில் மூன்று பேர் இளம் பெண்கள் ஆவர்.

டிரைவர் கைது:

விபத்து குறித்து தகவல் அறிந்ததும் விரைந்து வந்த போலீசார் காரின் ஓட்டுநரைப் பிடித்துக் கைது செய்தனர். விபத்தில் காயமடைந்த பலரை மீட்டு, சிகிச்சைக்காக மாவட்ட அரசு மருத்துவமனைக்குக் காவல்துறையினர் உடனடியாக அனுப்பி வைத்தனர். மேலும், விபத்தை ஏற்படுத்திய காரில் பயணித்தவர்களும் காயமடைந்ததாகக் கூறப்படுகிறது.திருவிழா ஊர்வலத்தின் போது நிகழ்ந்த இந்த திடீர் விபத்து அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

Advertisement