இஸ்ரேலில் ஆட்சியை தக்கவைக்க பிரதமர் நெதன்யாகு தீவிர முயற்சி
ஜெருசலேம்: இஸ்ரேலில் நடந்து முடிந்த பார்லிமென்ட் தேர்தலில், யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காத நிலையில் எதிர்க்கட்சியுடன் கைகோர்த்து தேசிய ஐக்கிய அரசை அமைக்க பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு வியூகம் வகுத்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
மேற்காசிய நாடான இஸ்ரேலின் பார்லிமென்டுக்கு சமீபத்தில் தேர்தல் நடந்தது. மொத்தமுள்ள, 120 இடங்களில், 61 இடங்களைப் பிடிக்கும் கட்சி அல்லது கூட்டணியே ஆட்சி அமைக்க முடியும். ஆனால், இந்தத் தேர்தலில் எந்தக் கூட்டணிக்கும் அறுதிப்பெரும்பான்மை கிடைக்கவில்லை.பிரதமர் நெதன்யாகுவின் லிகுட் கட்சியும் அதன் தீவிர வலதுசாரி கூட்டணிக் கட்சிகளும், 53 இடங்களை கைப்பற்றியுள்ளன. எதிர்க்கட்சி தலைவர் காடி ஐசன்கோட்டின் யாஷார் கட்சியும், அவரது அணியில் உள்ள மற்ற மூன்று யூத கட்சிகளும் சேர்ந்து, 48 இடங்களை கைப்பற்றின. பாலஸ்தீன ஆதரவு, அரபுக் கூட்டணி, 19 இடங்களை வென்றுள்ளது.
பெரும்பான்மைக்கு தேவையான, 61 இடங்களை எந்தக் கூட்டணியும் பெறவில்லை. இந்நிலையில், ஆட்சியை தக்க வைத்துக் கொள்வதற்காக, எதிர்க்கட்சித் தலைவர் காடி ஐசென்கோட்டுடன் கைகோர்த்து தேசிய ஐக்கிய அரசை அமைக்க, பிரதமர் நெதன்யாகுவின் நெருங்கிய வட்டாரங்கள் காய் நகர்த்தி வருவதாக தெரிகிறது.
நெதன்யாகுவின் கீழ் ஒருபோதும் பணியாற்ற மாட்டேன் என ஐசென்கோட் முன்பு திட்டவட்டமாக கூறியிருந்த போதிலும், அவரை கூட்டணியில் இணைக்க நெதன்யாகு தரப்பு இரண்டு முக்கிய வாய்ப்புகளை முன்வைத்துள்ளதாக 'தி ஜெருசலேம் போஸ்ட்' பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.அதில் ஒன்று சுழற்சி முறை ஆட்சி. அதாவது ஆட்சி காலத்தின் முதல் பாதியில் நெதன்யாகு பிரதமராக தொடர்வார். அதனைத் தொடர்ந்து மீதமுள்ள இரண்டு ஆண்டுக்கு காடி ஐசென்கோட் பிரதமராக இருப்பார்.
இரண்டாவது, நெதன்யாகு பிரதமர் பதவியை முழு காலமும் இருப்பார்; ஐசன்கோட் கூட்டணிக்கு முக்கிய அமைச்சர் பதவியை வழங்குவது.இருப்பினும், இந்த திட்டத்தை ஏற்பது குறித்து ஐசென்கோட் இதுவரை எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை. மேலும், நெதன்யாகுவை ஆட்சியை விட்டு அகற்றுவோம் என, பிரசாரம் செய்துவிட்டு, இப்போது அவருடனேயே கூட்டணி வைப்பது தற்கொலைக்கு சமம் என்று எதிர்க்கட்சித் தலைவர்கள் கருதுகின்றனர்.
அதிபர் முன் உள்ள வாய்ப்புகள்!
இஸ்ரேலின் அரசியலமைப்பு சட்டத்தின்படி, நேரடி பிரதமர் தேர்தல் கிடையாது. மாறாக, பார்லிமென்ட் உறுப்பினர்களின் ஆதரவைப் பெறக்கூடியவரையே, அதிபர் ஐசக் ஹெர்சாக் ஆட்சி அமைக்க முறைப்படி அழைப்பு விடுப்பார்
• தேர்தலுக்குப் பின், கட்சிகளின் பிரதிநிதிகளுடன் அதிபர் ஐசக் ஹெர்சாக் ஆலோசனை நடத்துவார்
• பெரும்பான்மையை நிரூபிக்க வாய்ப்புள்ள தலைவரை ஆட்சி அமைக்க அவர் அழைப்பார்
• மீண்டும் ஒரு தேர்தலை தவிர்க்க அரசியல் தலைவர்கள் பேசி சுமுக தீர்வு காண வேண்டும் என அதிபர் கேட்டுக் கொண்டுள்ளார்.
'சர்வதேச சதி!'
இதற்கிடையே, பிரதமர் நெதன்யாகு நேற்று கூறியுள்ளதாவது:
இஸ்ரேலில், அரபுக் கட்சிகள் கூட்டணி மூலம் குழப்பங்கள் ஏற்படுத்த, சர்வதேச சதி நடந்துள்ளது. அரபுக் கட்சிகள் கூட்டணிகள், நம் தேர்தல் முறையை கொள்ளையடித்துள்ளது. அந்தக் கூட்டணி எப்படி வெற்றி பெற்றது என்பது தொடர்பாக விசாரணை நடத்தப்பட வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார். தேர்தலில் முறைகேடு நடந்துள்ளதாக நெதன்யாகு கூறியுள்ள நிலையில், அது தொடர்பாக விசாரணை நடத்த அந்த நாட்டின் தேர்தல் கமிஷன் உத்தரவிட்டுள்ளது.