100% எத்தனால் வாகனங்களுக்கு அனுமதி அளித்தால் வினியோகம் எவ்வாறு மேற்கொள்ளப்படும்? மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் கேள்வி
-நமது டில்லி நிருபர்-
'மத்திய மோட்டார் வாகன விதிகள், 1989'ல், மத்திய சாலை போக்குவரத்து அமைச்சகம் கடந்த 26ல் திருத்தம் மேற்கொண்டது. அதன்படி, 'இ - 100' எனப்படும், 100 சதவீதம் எத்தனாலில் இயங்கும், 'ப்ளெக்ஸ் பியூல்' வாகனங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
'பெட்ரோலில் எத்தனால் கலப்பின் அளவை தற்போதைய 20 சதவீதம் என்ற அளவுக்கு மேல் உடனடியாக உயர்த்தும் திட்டம் இல்லை' என, பா.ஜ.,வைச் சேர்ந்த மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சர் ஹர்தீப் சிங் புரி, கடந்த 27ம் தேதி அறிவித்தார்.
'ஒருபுறம் எத்தனால் கலப்பு அதிகரிக்கப்படாது எனக் கூறப்படும் போது, 100 சதவீத எத்தனால் வாகனங்களுக்கான எரிபொருள் விநியோகம் எவ்வாறு தடையின்றி சாத்தியப்படும்?' என்ற நிலையில், அது குறித்து உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. கடந்த, 2025 - 26ம் ஆண்டுக்கான எத்தனால் வினியோக ஒதுக்கீட்டை அதிகரிக்கக் கோரி, கர்நாடகா உயர் நீதிமன்றத்தில் எத்தனால் உற்பத்தி நிறுவனம் மனு ஒன்றை தாக்கல் செய்தது. 'பாரத் பெட்ரோலியம், ஹிந்துஸ்தான் பெட்ரோலியம், இந்தியன் ஆயில்' ஆகிய நிறுவனங்கள் இந்த கோரிக்கையை பரிசீலிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதை எதிர்த்து, எண்ணெய் விற்பனை நிறுவனம் ஒன்று உச்ச நீதிமன்றத்தை அணுகியது. 'உயர் நீதிமன்ற உத்தரவு, பெட்ரோலில் 20 சதவீத எத்தனால் கலக்கும் தேசிய கொள்கையை பாதிக்கக் கூடும். இதற்கு தடை விதிக்க வேண்டும்' என அந்நிறுவனம் வாதிட்டது. இதையடுத்து, 'எத்தனால் வினியோகத்தில் தற்போதைய நிலை தொடர வேண்டும்' என, உச்ச நீதிமன்றம் கடந்த ஜூன் 30ல் உத்தரவிட்டது.
இந்த வழக்கு, உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகள் எம்.எம். சுந்தரேஷ், பிரசன்னா பி. வரலே அடங்கிய அமர்வு முன் மீண்டும் இன்று (அக்டோபர் 29) விசாரணைக்கு வந்தது. அப்போது, '100 சதவீதம் எத்தனால் பயன்படுத்தும் வாகனங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டால், அதற்கான வினியோகம் எவ்வாறு மேற்கொள்ளப்படும்' என, நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
இதற்கு பதிலளித்த மத்திய அரசின் அட்டர்னி ஜெனரால் வெங்கட்ரமணி, “இதற்கு பெரிய அளவில் உற்பத்தி முறைகளில் மாற்றங்கள் செய்ய வேண்டியிருக்கும்,” என, பதிலளித்தார்.
நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு: சுற்றுச்சூழல் பாதுகாப்பு, பொதுமக்களின் நலன் ஆகியவற்றுடன், கிராமங்களில் வசிக்கும் சாதாரண மக்களுக்கும், விவசாயிகளுக்கும் பயனளிக்கும் வகையில் மத்திய அரசின் கொள்கைகள் அமைய வேண்டும்.
குறிப்பாக, கிராமப்புற வாழ்வாதாரமான கரும்பு விவசாயிகளின் பொருளாதார முன்னேற்றம் எத்தனால் வினியோக கொள்கையோடு பிணைக்கப்பட்டுள்ளதால், அவர்களின் நலன் குறித்தும் ஆராய வேண்டும். இந்த வழக்கு விசாரணை அடுத்த மாதம் ஒத்திவைக்கப்படுகிறது. இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.
மேலும்
-
ஸ்ரீரங்கம் கோவில் ஜீயரை அறநிலையத்துறை நியமிப்பதை உறுதியாக அனுமதிக்க முடியாது: ஐகோர்ட் கண்டிப்பு
-
ஏஐ சிப் குறித்த தகவல்: என்விடியா சிஇஓவை உளவுபார்த்த சீனா
-
இஸ்ரேலில் ஆட்சியை தக்கவைக்க பிரதமர் நெதன்யாகு தீவிர முயற்சி
-
'அர்னாப்' புயலால் ஒடிஷாவில் கனமழை: தனித் தீவுகளாக மாறியது 300 கிராமங்கள்
-
ஸ்பெயினில் வெடித்தது போராட்டம்; ரயில் விபத்தைத் தொடர்ந்து அமைச்சர் பதவி விலக மக்கள் வலியுறுத்தல்
-
ஜனநாயகத்துக்கு ஆபத்து; நக்சல் வீடியோ தொடர்பாக நடிகர் நசிருதீன் ஷாவுக்கு மத்திய அமைச்சர் பதிலடி