ரயில்வே குகை வழிப்பாதையில் கூடுதல் மின்விளக்கு தேவை

கரூர்:கரூர் அருகே, புதிதாக அமைக்கப்பட்டுள்ள ரயில்வே குகை வழிப்பாதையில், போதிய மின் விளக்குகள் அமைக்க வேண்டும் என, பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

கரூர் - திருச்சி ரயில்வே வழித்தடத்தில் தொழிற்பேட்டை- சணப்பிரட்டி இடையே குகை வழிப்பாதை கட்டும் பணிகள் சமீபத்தில் நிறைவு பெற்றது. அதை தொடர்ந்து, ரயில்வே கேட் நிரந்தரமாக மூடப்பட்டது. தற்போது, குகை வழிப்பாதை அமைக்கும் பணி முழுமையாக நிறைவு பெற்றதால், பொதுமக்கள் பயன்பாட்டுக்கு திறது விடப்பட்டுள்ளது.

அதன் வழியாக, பொதுமக்கள் சணப்பிரட்டி உள்ளிட்ட பல்வேறு கிராம பகுதிகளுக்கு சென்று வருகின்றனர். ஆனால், குகை வழிப்பாதையில், இரண்டு பக்கமும் போதிய மின்விளக்குகள் இல்லை. இதனால், இரவு நேரத்தில் குகை வழிப்பாதையில் நடந்து செல்லும் பொது மக்கள், வாகனங்களில் செல்வோர் அச்சத்துடன் செல்கின்றனர்.

இந்நிலையில், மழைநீர் குகை வழிப்பாதையில் தேங்குவதை தடுக்க, மேற்கூரை அமைக்கும் பணி நிறைவடைந்துள்ளது. இதனால், போதிய மின்விளக்குகள் இல்லாததால், இரவு நேரத்தில் குகை வழிப்பாதை இருட்டில் உள்ளது. எனவே, கரூர் தொழிற்பேட்டை - சணப்பிரட்டி இடையே உள்ள, ரயில்வே குகை வழிப்பாதையில் கூடுதல் மின் விளக்குகள் அமைக்க வேண்டியது அவசியம்.

Advertisement