விளையாட்டு வினையானது, துப்பாக்கி குண்டு பாய்ந்து சிறுவன் கவலைக்கிடம்: நெய்வேலியில் பரபரப்பு

நெய்வேலி: நெய்வேலியில், சிறுவனுடன் விளையாடியவர் 'ஏர் கன்'சுட்டதில் நெஞ்சில் குண்டு பாய்ந்த சிறுவன் ஆபத்தான நிலையில், தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

கடலுார் மாவட்டம், நெய்வேலி டவுன்ஷிப் வட்டம் 21, எம்.ஜி.ஆர்., சதுக்கத்தை சேர்ந்தவர் செல்வக்குமார்.31; இவரது மனைவி ரம்யா.28; இவர்களது மகன் சாய் சரண்.7; இவர் நெய்வேலியில் உள்ள தனியார் பள்ளியில் 2ம் வகுப்பு படித்து வருகிறார். செல்வக்குமார் வீட்டின் அருகே வசிப்பவர் சுந்திரமூர்த்தி மகன் சிவா,27; சிவாவும், செல்வக்குமாரும் நெருங்கிய நண்பர்கள். சிவா அடிக்கடி செல்வக்குமார் வீட்டிற்கு வந்து செல்வது வழக்கம். செல்வக்குமார் வீட்டில் ஏர்கன் வைத்துள்ளார்.

நேற்று முன்தினம் இரவு சிவாவும் சாய் சரணும் விளையாடி கொண்டிருந்தனர். அப்போது அங்கிருந்த ஏர்கன் துப்பாக்கியை எடுத்து சிவா சுட்டதில் சாய் சரண் நெஞ்சில் குண்டு பாய்ந்து மயங்கி விழுந்தார். உடன் அவரை, என்.எல்.சி., மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு, அவருக்கு முதலுதவி அளித்த பின் மேல் சிகிச்சைக்காக புதுச்சேரியில் உள்ள தனியார் மருத்துவனையில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

தகவலறிந்த தெர்மல் இன்ஸ்பெக்டர் சந்திரன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று துப்பாக்கியை பறிமுதல் செய்து, சிவாவிடம் விசாரித்து வருகின்றனர். பள்ளி மாணவன் துப்பாக்கியால் சுடப்பட்ட சம்பவம் பெரும்பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நெய்வேலியில் தொடர் கொலை, திருட்டு, அடிதடியோடு தற்போது துப்பாக்கி கலாசாரமும் தலை துாக்கி உள்ளதால் நகர மக்கள் அச்சமடைந்துள்ளனர்.

Advertisement