சாலை, பஸ் வசதியின்றி பள்ளி மாணவர்கள் அவதி, வீடு கிடைக்காமல் துப்புரவு பணியாளர்கள் தவிப்பு: குறை தீர்க்கும் கூட்டத்தில் குவிந்த புகார்கள்

ராமநாதபுரம்: ராமநாதபுரத்தில் நடந்த குறை தீர்க்கும் கூட்டத்தில், கடலாடி தாலுகா கட்டாலங்குளம் பகுதியில் தார் ரோடு சேதம், பஸ் வசதியின்றி மாணவர்கள் சிரமப்படுகின்றனர். தொண்டி பேரூராட்சி துப்புரவு பணியாளர்கள் வாடகைக்கு கூட வீடு தருவது இல்லை. தகர செட்டில் சிரமப்படுவதாக மனு அளித்தனர்.

ராமநாதபுரம் பழைய கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கத்தில் மக்கள் குறை தீர்க்கும் கூட்டம் நடந்தது. கலெக்டர் சிவகுரு பிரபாகரன் தலைமை வகித்தார். மாவட்ட வருவாய் அலுவலர் சங்கரநாராயணன் முன்னிலை வகித்தார். மக்களிடம் பல்வேறு கோரிக்கைகள் குறித்த 521 மனுக்கள் பெறப்பட்டுள்ளன. சில மனுக்களின் விபரம்: * சாலை மோசம், பஸ் வரல.. : கடலாடி தாலுகா வேப்பங்குளம் ஊராட்சி கட்டாலங்குளம் பகுதியில் தார் ரோடு சேதமடைந்துள்ளதால் பஸ் வசதியின்றி பள்ளி 5 கி.மீ.,ல் உள்ள டி.எம்.கோட்டை அரசுப் பள்ளிக்கு மாணவர்கள் நடந்து சென்று சிரமப்படுகின்றனர். எனவே உடனடியாக சாலை வசதி செய்து கொடுத்து அரசு பஸ்கள் இயக்க வேண்டும்.

* வீடு கட்டி தாருங்கள்: தொண்டி பேரூராட்சியில் தற்காலிகமாக துப்புரவு பணிபுரியும் பெண்கள் கூறுகையில், குறைந்த சம்பளத்தில் சிரமப்படுகிறோம். வட்டக்கேணி பகுதியில் குப்பை, கழிவு நீர்க்கு மத்தியில் தகரசெட் அமைத்து வாழ்கிறோம். மழைக்காலத்தில் காய்ச்சல், தொற்று நோய்களால் பாதிக்கப்படுகிறோம். எங்களுக்கு வாடகைக்கு கூட வீடு தர மறுக்கின்றனர். அரசு இலவச தொகுப்பு வீடு கட்டித்தர வேண்டும் என்றனர்.

* நிவாரணம் வழங்கக் கோரிக்கை: பாசிப்பட்டினத்தை சேர்ந்த நுாருல் அஷிகா அவரது உறவினர்களுடன் மனு அளித்தார். ராமநாதபுரம் அரசு மருத்துக்கல்லுாரி மருத்துவமனையில் பச்சிளம் குழந்தை பிறந்து 4 நாட்களில் இறந்து விட்டது. மருத்துவ உபகரணம் இல்லாததாது காரணம் என்கின்றனர். குழந்தை இறப்பிற்கு அரசு நிவாரணம் தர வேண்டும். மருத்துவமனையில் உயர் சிகிச்சைக்கு தேவையான கருவிகளை வாங்க வேண்டும் என்றனர்.

* தையல் கலைஞர்கள் கோரிக்கை: ராமநாதபுரம் மாவட்ட தையல் கலைஞர்கள் சங்கம் சார்பில் மனு அளித்தனர். அதில் கட்டுமானத் தொழிலாளர்கள் போன்று நலவாரிய சலுகைகள் வழங்க வேண்டும். கார்மென்ட்ஸ் தொழிலாளர்களுக்கு குறைந்தபட்ச கூலி, ஓய்வூதியம் வழங்க வலியுறுத்தினர்.

* சாலையை மீட்க கோரிக்கை: சக்கரகோட்டை அருகே அம்மன் கோவில் கிராமத் தலைவர் கதிரேசன் தலைமையில் மக்கள் மனு அளித்தனர். அதில், பொதுமக்கள் பயன்பாட்டில் உள்ள தார் சாலையை அபகரிக்கும் நோக்கத்தில் சிலர் போலி ஆவணங்கள் தயார் செய்து மிரட்டுகின்றனர். அதனை தடுத்து, தார் சாலையை மீட்டுத்தர வேண்டும் என்றனர்.

* காட்டுப்பன்றிகள் தொல்லை: கடலாடி தாலுகா நரிப்பையூர் விவசாயிகள் மனுவில், எங்கள் பகுதியில் 400 ஏக்கரில் நெல், கடலை சாகுபடி செய்துள்ளோம். பயிர் வளர்ந்து வரும் நேரத்தில் காட்டுப் பன்றிகள் நுழைந்து சேதப்படுத்துகின்றன. அவற்றை விரட்டி, சேதமான பயிர்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என வலியுறுத்தினர்.

* பள்ளி கட்டம் சேதம்: ஆர்.எஸ்.மங்கலம் சோழந்துாரை சேர்ந்த சமூக ஆர்வலர் மணி அளித்த மனுவில், சோழந்துார் அரசு உயர்நிலை பள்ளியில் கட்டடம் கூரை சேதமடைந்த நிலையில் உள்ளன. விபத்திற்கு முன்னதாக அவற்றை ஆய்வு செய்து, உடன் சீரமைக்க வலியுறுத்தினார்.

கூட்டத்தில் துணை கலெக்டர் பயிற்சி சினேகா, ஆர்.டி.ஓ., ஹபிபூர் ரகுமான், கலெக்டரின் நேர்முக உதவியாளர்(பொது) ஜேன் கிறிஸ்டிபாய், மாவட்ட சமூக பாதுகாப்புத்திட்ட தனித்துணை கலெக்டர் கிருஷ்ணகுமாரி, மாவட்ட வழங்கல் அலுவலர் ரமேஷ் உள்ளிட்ட அரசு அலுவலர்கள் பங்கேற்றனர்.-

Advertisement