சிவகங்கையில் மழைக்கு வீடுகள் சேதம்: 4 ஆடுகள் பலி
சிவகங்கை: மாவட்டத்தில் நேற்று (அக்.,25) இரவு பெய்த மழைக்கு வீடுகள் இடிந்து, 4 ஆடுகள் வரை பலியானது.
வடகிழக்கு பருவ மழை துவங்கியதை அடுத்து மாவட்டத்தில் பரவலாக அனைத்து தாலுகாக்களிலும் அவ்வப்போது மழை பெய்து வருகிறது. ஏற்கனவே இளையான்குடி பகுதியில் இடி மின்னல் தாக்கியதில் விவசாய பணியில் இருந்த 2 பெண்கள் பலியாகினர். வீட்டு சுவர் இடிந்து விழுந்ததில், 6 ஆடுகள் வரை இடிபாடுகளில் சிக்கி இறந்தது. திண்டுக்கல் மாவட்டம், கரந்தமலை பகுதியில் பலத்த மழை பெய்ததால், காட்டாற்று வெள்ளம் ஏற்பட்டதில், சிங்கம்புணரி பாலாற்றில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியது. இது சிங்கம்புணரி விவசாயிகளிடையே வரவேற்பை பெற்றுள்ளது.
நேற்று முன்தினம் இரவு 11:00 மணிக்கு மின்னல் தாக்கியதில் சிவகங்கை காந்தி வீதியில் உள்ள (ஆலமலர் எதிரே) மின் டிரான்ஸ்பார்மர் முழுவதும் எரிந்தது. இதனால் காந்தி வீதி முழுவதும் மின்தடை ஏற்பட்டது. இன்று (அக்.,26) காலை ஊழியர்கள் டிரான்ஸ்பார்மரை மாற்றினர். நேற்று முன்தினம் இரவு 11:00 மணிக்கு ஏற்பட்ட மின்தடை இன்று மதியம் 12:00 மணிக்கு வழங்கப்பட்டது. தொடர் மழைக்கு திருப்புத்துார் ரோட்டில் உள்ள நெடுஞ்சாலை துறை கோட்ட பொறியாளர் அலுவலக சுற்றுச்சுவரின் ஒரு பகுதி சேதமானது. மழைக்கு மானாமதுரை தாலுகா செய்களத்துார் அருகே கோச்சடை கிராமத்தை சேர்ந்த ஆறுமுகம் வீட்டின் ஒரு பக்க சுவர் இடிந்ததில், அங்கிருந்த 4 செம்மறி ஆடுகள் பலியாகின.காளையார்கோவில் அருகே மேப்பல் கிராமத்தை சேர்ந்த ராஜேந்திரனின் ஓட்டு வீட்டின் ஒரு பகுதி சேதமானது.