அம்மன் கோவிலில் ரூ.6 லட்சம் வெள்ளி பொருட்கள் திருட்டு

பாகூர்: பாகூர் அடுத்த சோரியாங்குப்பம் செடல் செங்கழு நீர் மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம் செய்ய முடிவு செய்யப்பட்டு கடந்த மாதம் பாலாலயம் செய்யப்பட்டது. இதையடுத்து, திருப்பணி வேலைகள் நடந்து வருகிறது. இதனால், கோவிலின் வடக்கு பகுதியில் தகர சீட்டு கொட்டகை அமைக்கப்பட்டு அங்கு சாமி சிலை வைத்து அபிஷேகம், பூஜைகள் செய்யப்பட்டு வருகிறது. நேற்று (அக்.,25) பவுர்ணமி என்பதால் இரவு சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு கோவில் மூடப்பட்டது.

இந்நிலையில், அர்ச்சகர் வைத்தீஸ்வரன், 50; இன்று (அக்.,26) காலை கோவிலுக்கு சென்றார். அப்பொழுது, தகர கொட்டகையில் இருந்த இரும்பு பீரோவின் பின்னால் மறைத்து வைக்கப்பட்டிருந்த பித்தளை பொருட்களை தவிர்த்து, வெள்ளியிலான குடம், சொம்பு, தட்டு உள்ளிட்ட சுமார் 3 கிலோ கொண்ட பூஜை பொருள்கள் திருடு போனது தெரியவந்தது. இதன் மதிப்பு 6 லட்ச ரூபாயாகும்.

இது குறித்து , கோவில் நிர்வாக அதிகாரி வீரப்பன்,புகாரின் பேரில் பாகூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தனர். அதில் தகர கொட்டையின் தெற்கு பகுதியில் உள்ள பக்கவாட்டு தகர ஷீட்டை வெட்டி அதன் வழியாக உள்ளே சென்று வெள்ளி பூஜை பொருட்களை திருடிச் சென்றது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு தடயங்கள் சேகரிக்கப்பட்டது. சோரியாங்குப்பம் கோவிலில் வெள்ளி பூஜை பொருட்கள் திருடு போன சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Advertisement