தினமும் 8 பேர் பக்கவாதத்தால் பாதிப்பு

மதுரை: பக்கவாத பாதிப்புகளான வாய் கோணுதல், கை, கால் செயலிழத்தல், நடையில், பார்வையில் தடுமாற்றம் ஏற்பட்ட நான்கரை மணி நேரத்திற்குள் மருத்துவமனைக்கு வந்தால் முழுமையாக குணமாகி விடலாம் என மதுரை அரசு மருத்துவமனை நரம்பியல் துறைத்தலைவர் முருகன் தெரிவித்தார்.

உலக பக்கவாத தினத்தை முன்னிட்டு நடந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் டீன் அருள் சுந்தரேஷ்குமார் தலைமை வகித்தார். துறைத்தலைவர் முருகன் பேசியதாவது: ஒருபக்கம் வாய் இழுத்தல், கை, கால் செயலிழத்தல், பார்வை தடுமாற்றம், நடையில் மாற்றம் ஆகியவை பக்கவாத பாதிப்பின் முதல் அறிகுறிகள். இதில் எந்த அறிகுறியாவது தென்பட்டால் மூளை ரத்தக்குழாயில் அடைப்பு ஏற்பட்டு இருக்கலாம். அறிகுறி வந்த நான்கரை மணி நேரத்திற்குள் மருத்துவமனைக்கு வந்தால் அதற்கேற்ற மருந்துகள் செலுத்தப்பட்டு முழுமையாக காப்பாற்றப்படலாம்.

இங்கு மாதத்திற்கு 250 பேர் பக்கவாத பாதிப்புடன் வருகின்றனர். இதில் 20 பேரே, பக்கவாதம் வந்த முதல் நான்கரை மணி நேரத்திற்குள் வந்து முழுமையாக குணமடைகின்றனர். தினமும் 8 பேர் பாதிப்புக்குள்ளாகி சிகிச்சைக்கு வருகின்றனர் என்றார்.

பேராசிரியர்கள் ஜஸ்டின், கிஷோர், இன்டர்வென்ஷனல் ரேடியோலஜிஸ்ட் கார்த்திக்ராஜன், உதவி பேராசிரியர்கள் ராமு, செந்துார் ராஜபாண்டியன், விக்னேஷ், செழியன் பேசினர். ஆர்.எம்.ஓ.,க்கள் சரவணன், முரளிதரன் கலந்து கொண்டனர்.

Advertisement