பைக்குகள் மோதி விபத்து இருவர் தீப்பிடித்து பலி

மத்துார்: பைக்குகள் நேருக்கு நேர் மோதி தீப்பிடித்ததில், சாரதி, 24, திருச்செல்வம், 21, ஆகியோர் உயிரிழந்தனர்.

திருவண்ணாமலை மாவட்டம், தண்டராம்பட்டு, மோதக்கல்லை சேர்ந்தவர் சாரதி. இவரது சகோதரர் வேலு, 18. இருவரும், 'பஜாஜ் பல்சர்' பைக்கில் சென்று கொண்டிருந்தனர்.

இதேபோல, தர்மபுரி மாவட்டம், எஸ்.பட்டியை சேர்ந்தவர் திருச்செல்வம், திருப்பதி, 17, ஆகியோர், கிருஷ்ணகிரியில் இருந்து திருவண்ணாமலைக்கு, பைக்கில் சென்றனர். காலை, 7:45 மணியளவில் பெங்களூரு - கிருஷ்ணகிரி சாலையில் சென்றபோது, மத்துார் அருகே இரு பைக்குகளும் நேருக்கு நேர் மோதின. இதில், இரு பைக்குகளின் பெட்ரோல் டேங்குகள் வெடித்து, தீப்பிடித்தன.

விபத்தில், சாரதி, திருச்செல்வம் இருவரின் உடலிலும் தீப்பிடித்து, சம்பவ இடத்திலேயே கருகி பலியாகினர். திருப்பதி, வேலு படுகாயமடைந்தனர். மத்துார் போலீசார், இருவரையும் மீட்டு, கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.

போலீசார் கூறுகையில், 'திருச்செல்வம், திருப்பதி மீது, திருட்டு வழக்குகள் உள்ளன. அவர்கள் ஓட்டி வந்த பஜாஜ் பல்சர் பைக்கும், அக்., 20ல், சேலத்தில் திருடப்பட்டது. பைக்குகளின் பெட்ரோல் டேங்க் மூடி உடைந்ததே, தீ விபத்திற்கு காரணம்' என்றனர்.

Advertisement