விபத்துக்கு காரணமாகும் தரமற்ற உதிரி பாகங்கள்

விழுப்புரம் மாவட்டத்தில், வாகனங்களின் பயன்பாடுகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக, சொந்த வாகனங்களை விட, வாழ்வாதார தொழிலுக்காக இயக்கப்படும், இரு சக்கர வாகனங்கள், ஆட்டோக்கள், வாடகை கார், வேன்கள் அதிகளவில் பயன்பாட்டில் உள்ளன.

இந்த வாகனங்களின் இயக்கத்தை வைத்து, பல தொழிலாளர் குடும்பத்தினர் பிழைப்பு நடத்தி வருகின்றனர்.

வாகனங்களுக்கு பழுது நீக்கம், புதுப்பிப்பு, ஸ்பேர் பார்ட்ஸ்கள் மாற்றத்திற்காக தினசரி ஒர்க் ஷாப்புகள், சர்வீஸ் சென்டர்களில் விடப்படுகின்றன. அப்போது, வாகனங்களுக்கான இன்ஜின் உபகரணங்கள், இன்ஜின் ஆயில், வெளிப்புற மின் சாதனங்கள், சுவிட்சுகள், அலங்கார சாதனங்கள் என மாற்றப்படும்போது, நகர பகுதியில் உள்ள ஸ்பேர் பார்ட்ஸ் கடைகள், சிறிய விற்பனையகங்களில் தான் பொருட்கள், சாதனங்கள் வாங்கி மாற்றி வருகின்றனர்.

இதுபோன்ற ஸ்பேர் பார்ட்ஸ் கடைகள், விற்பனையகங்கள் முக்கிய வணிக வீதிகளில் ஆங்காங்கே பல உள்ளன. நகர்ப்புறங்கள் போல், பேரூராட்சிகளிலும் பல விற்பனையகங்கள் உள்ளன. சில அங்கீகரிக்கப்படாத விற்பனையகங்களில் விற்கப்படும் பொருட்கள், சாதனங்கள் உரிய விலைக்கு விற்கப்படாமல், இஷ்டத்திற்கு விலை வைத்து விற்கப்படுவதாக, நீண்டகாலமாக புகார் எழுந்து வருகிறது.

தினசரி பல கோடி ரூபாய் அளவில், பிரபல நிறுவன பிராண்டட் சாதனங்கள் முதல் டூப்ளிகேட் சாதனங்கள் வரை விற்கப்படுகிறது. அதில் குறிப்பிட்டுள்ள அதிக பட்ச விலையை விட கூடுதலாகவும், அதிக பட்ச விலையில் தான் பெரும்பாலும் சாதனங்கள் விற்கப்படுகிறது. இதற்கு உரிய பில் வழங்குவதில்லை.

அந்த சாதனங்களின் விலை, மெக்கானிக்குகளுக்கும் தெரிய வாய்ப்பில்லை. சாதனங்கள், ஆயில் போன்றவை டூப்ளிகேட் விற்பனையும் நடக்கிறது. இவைகள் கண்காணிக்கப்படாமல் தொடர்வதால், தரமற்ற சாதனங்களை பொருத்தி, வாகனங்கள் அடிக்கடி பழுதாவதும், புகையால் சுற்றுச்சூழல் பாதிப்பதும், விபத்துகளுக்கும் காரணமாகின்றன.

இதுபோன்ற நிறுவனங்களை, மாவட்ட நிர்வாகம் மற்றும் வணிக வரித்துறையினர் கண்காணித்து, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

Advertisement