பணிபுரியும் ஆசிரியர்களுக்கு டிச.,20ல் சிறப்பு டெட் தேர்வு

சென்னை: 'பணிபுரியும் ஆசிரியர்களுக்கு, டிசம்பர், 20ல் சிறப்பு 'டெட்' தேர்வு நடத்தப்படும்' என, ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.

மத்திய அரசின் கட்டாய கல்வி உரிமைச் சட்டப்படி, நாடு முழுதும் உள்ள அனைத்து வகை பள்ளிகளிலும், இடைநிலை, பட்டதாரி ஆசிரியர் பணியில் சேர, ஆசிரியர் தகுதித் தேர்வான, 'டெட்' தேர்வில், தேர்ச்சி பெறுவது கட்டாயமாகும். அத்துடன், கட்டாய கல்வி உரிமை சட்டம் அமலாவதற்கு முன் பணியில் சேர்ந்த ஆசிரியர்கள், பள்ளியில் தொடர்ந்து பணியாற்றவும், பதவி உயர்வு பெறவும், 'டெட்' தேர்வு தேர்ச்சி கட்டாயம் என, உச்சநீதிமன்றம், கடந்த ஆண்டு, செப்.,1ல் தீர்ப்பு வழங்கியது.

இதையடுத்து, தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் வழியே, 2026ம் ஆண்டு, ஜனவரி, ஜூலை, டிசம்பர் மாதங்களில், சிறப்பு 'டெட்' தேர்வு நடத்தப்படும் என, பள்ளிக்கல்வித்துறை அறிவித்தது. ஆனால், ஜனவரியில் சிறப்பு டெட் தேர்வு நடத்தப்படவில்லை. கடந்த ஜூலை மாதம் தேர்வு நடந்தது. இதில், 1.09 லட்சம் பேர் தேர்ச்சி பெறவில்லை. தேர்ச்சி பெறாத ஆசிரியர்கள், தேர்வில் தேர்ச்சி பெறும் வகையில், சனி, ஞாயிறு உட்பட விடுமுறை நாட்களில், நேரடி சிறப்பு பயிற்சிகள் வழங்கப்படும் என, பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.

இந்நிலையில், பணிபுரியும் ஆசிரியர்களுக்கு, டிசம்பர், 20ம் தேதி சிறப்பு 'டெட்' தேர்வு நடத்தப்படும் என, ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. 'டெட்' முதல் தாள் தேர்வு, டிச., 20ம் தேதி காலையிலும், இரண்டாம் தாள் தேர்வு, டிச., 20 மாலையிலும் நடக்கிறது. இதற்கான விண்ணப்பப் பதிவு இன்று தொடங்குகிறது.

ஆசிரியர்கள் www.trb.tn.gov.in என்ற இணையதளம் வழியே, நவ., 19ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். மொத்தம், 150 மதிப்பெண்களுக்கு தேர்வு நடத்தப்பட உள்ளது.

Advertisement