வரும் 30ல் விவசாயிகள் நலன் காக்கும் கூட்டம்
திருவள்ளூர்: திருவள்ளுர் கலெக்டர் அலுவலகத்தில், வரும் 30ம் தேதி, மாவட்ட அளவிலான விவசாயிகள் நலன் காக்கும் கூட்டம் நடைபெற உள்ளதாக, கலெக்டர் கவிதா அறிவித்துள்ளார்.
திருவள்ளூர் கலெக்டர் கவிதா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:
திருவள்ளுர் கலெக்டர் அலுவலகத்தில், மாவட்ட அளவிலான விவசாயிகள் நலன் காக்கும் கூட்டம், வரும் 30ம் தேதி காலை 10:00 மணிக்கு நடைபெற உள்ளது.
இக்கூட்டத்தில் வேளாண்மை, தோட்டக்கலை, வேளாண் விற்பனை மற்றும் வணிகம், வேளாண்மைப் பொறியியல், கால்நடை பராமரிப்பு, மீன்வளம், கூட்டுறவு, வங்கிகள், திருத்தணி கூட்டுறவு சர்க்கரை ஆலை, மின் வாரியம், வருவாய், ஊரக வளர்ச்சி மற்றும் வேளாண் சார்ந்த துறைகளின் மாவட்ட அளவிலான தலைமை அலுவலர்கள் அனைவரும் தவறாது பங்கேற்க வேண்டும்.
எனவே, திருவள்ளுர் மாவட்டத்தில் உள்ள அனைத்து விவசாயிகளும், விவசாயம் தொடர்பாக தங்களுக்கும், தங்கள் பகுதிகளில் ஏற்படும் குறைகளுக்கும் தீர்வு காண, இக்கூட்டத்தில் பங்கேற்று பயன்பெறலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.