கிராமங்களுக்கு சுகாதாரமற்ற குடிநீர் வினியோகம்: மக்களுக்கு நோய்கள் இலவசம்

பந்தலுார்: சேரங்கோடு ஊராட்சியில், சேறு கலந்த தண்ணீர் வினியோகம் செய்வதால் மக்களுக்கு நோய் பரவும் அபாயம் ஏற்பட்டு உள்ளது.

கூடலுார் சேரங்கோடு ஊராட்சிக்கு உட்பட்ட, கிராமப் பகுதிகளுக்கு குடிநீர் விநியோகம் செய்யும் வகையில் கடந்த 2014 ஆம் ஆண்டு குடிநீர் அபிவிருத்தி திட்டத்தின் கீழ் 7.21 கோடி ரூபாய் செலவில் கூட்டு குடிநீர் திட்டம் செயல்படுத்தப்பட்டது.

சோலாடி ஆற்றில் இருந்து தண்ணீரை எடுத்து, மேட்டுபாங்கான அமைக்கப்பட்டுள்ள சுத்திகரிப்பு தொட்டியில் சுத்திகரிப்பு செய்து, சுத்தமான குடிநீர் பொதுமக்களுக்கு விநியோகம் செய்ய வேண்டும் என்பது திட்டம்.

இதற்காக மாதம் தோறும் 42 ஆயிரம் ரூபாய் ஊராட்சி மூலம் செலவு செய்யப்பட்டு வருகிறது.

ஆனால் பெரும்பாலான கிராமங்களுக்கு குடிநீர் கொண்டு செல்லும் குழாய்கள், அகற்றப்பட்டும், உடைந்தும் காணப்படுவதால் தண்ணீர் வினியோகம் பல கிராமங்களுக்கும் தடைபட்டு உள்ளது.

இந்நிலையில் சோலாடியில் உள்ள சுத்திகரிப்பு தொட்டியில் காணப்படும் மஞ்சள் நிறத்திலான சேறு கலந்த தண்ணீர் மக்களுக்கு நேரடியாக வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.

இதனால் குடிநீரை பிடித்து வைக்கும் பாத்திரங்கள் மற்றும் தொட்டிகள் மஞ்சள் நிறத்திற்கு மாறி உணவு சமைக்க முடியாமலும், பிற தேவைகளுக்கு இந்த தண்ணீரை பயன்படுத்த முடியாமலும் மக்கள் சிரமப்பட்டு வருகின்றனர்.

எனவே பொதுமக்கள் பயன்படுத்த முடியாமலும், சேறு கலந்த தண்ணீரை விநியோகம் செய்வது குறித்தும் உரிய ஆய்வு மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம் ஆகும்.

Advertisement