வாடகை பிரச்னையால் முடங்கிய தபால் சேவை: கன்டோன்மென்ட் கட்டடத்தில் கொண்டுவர வலியுறுத்தல்

குன்னுார்: ‘வெலிங்டனில் மூடப்பட்டு, பேரக்ஸ் தபால் நிலையத்துடன் இணைக்கப்பட்ட தபால் அலுவலகத்தை கன்டோன்மென்ட் கட்டடத்தில் கொண்டு வர வேண்டும்,’ என, வலியுறுத்தப்பட்டது.

குன்னுார் வெலிங்டனில் பிரிட்டிஷ் ஆட்சிகாலம் முதல் செயல்பட்டு வந்த தபால் நிலையம், வாடகை தொடர்பான பிரச்னையால் கடந்த ஆக., முதல் பேரக்ஸ் தபால் நிலையத்துடன் இணைக்கப்பட்டு, இங்கு மூடப்பட்டது. இதனால், கன்டோன்மென்ட் பகுதிகளை உள்ளடக்கிய மக்கள் மற்றும் ராணுவ குடும்பத்தினர் பலரும் தபால் தேவைகளுக்காக பேரக்ஸ் பகுதிக்கு செல்கின்றனர். அங்கு, கூட்ட நெரிசல் மற்றும் அலைச்சல் அதிகமாகிறது.

இப்பகுதியை சேர்ந்த சமூக ஆர்வலர் தர்மசீலன் கூறுகையில்,‘‘இந்த பிரச்னையை தீர்க்க தனிநபர்களும் பல்வேறு சங்கங்களும் தீவிர முயற்சிகளை மேற்கொண்ட போதிலும், அரசியல் கட்சிகள் முன்வராததால், அந்த முயற்சிகளும் தோல்வியடைந்தன. மற்ற பகுதிகள் வளர்ச்சி அடைந்து வரும் வேளையில், ஏற்கனவே நூலகத்தை இழந்த இப்பகுதியில் தபால் சேவையும் இங்கிருந்து அகற்றி பேரக்ஸ் தபால் நிலையத்தில் இணைக்கப்பட்டது. கன்டோன்மென்ட் விளையாட்டு மைதானத்தில் உள்ள கட்டடத்திற்கு தபால் நிலையத்தை மாற்ற கோரியும் தீர்வு இல்லை. இந்த கட்டடத்தில் தபால் நிலையம் உட்பட நூலகம் மற்றும் ரேஷன் கடை போன்ற மக்கள் சேவைகளை கொண்டு வர வேண்டும்,’’ என்றார்.

Advertisement