அரசு பள்ளியில் சிமென்ட் காரை பெயர்ந்து விழுந்ததால் பரபரப்பு: உயிர் தப்பிய மாணவர்கள்

பெண்ணாடம்: பெண்ணாடம் அருகே அரசு தொடக்கப் பள்ளி வகுப்பறை மேற்கூரையின் சிமென்ட் காரை பெயர்ந்து விழுந்ததால் பரபரப்பு நிலவியது.

பெண்ணாடம் அடுத்த திருமலை அகரத்தில் (மேற்கு) ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி உள்ளது. இங்கு 27 மாணவ, மாணவிகள் படிக்கின்றனர். இப்பள்ளி கட்டடம் கடந்த 40 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டதால் போதிய பராமரிப்பின்றி மேற்கூரையில் பல இடங்களில் சிமென்ட் காரைகளில் விரிசல் ஏற்பட்டு எந்த நேரத்திலும் கீழே விழும் அபாயகரமான சூழலில் இருந்தது.

இந்நிலையில், சமீபத்தில் பெய்த தொடர் பருவமழை காரணமாக கட்டடத்தில் ஈரப்பதம் ஏற்பட்டிருந்தது. நேற்று பகல் 1:30 மணியளவில் திடீரென சிமென்ட் காரை பெயர்ந்து விழுந்தது.

சிமென்ட் காரை விழுந்த இடத்தில் மாணவர்கள், ஆசிரியர்கள் யாரும் இல்லாததால் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். தொடர்ந்து, மாணவர்களை அருகிலுள்ள மாரியம்மன் கோவிலில் தங்க வைத்து ஆசிரியர்கள் பாடம் நடத்தினர்.

இதுகுறித்து நல்லுார் வட்டார கல்வி அலுவலர், வருவாய்த்துறை மற்றும் போலீசார் விசாரித்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Advertisement