20 ஆண்டுகளாக நீர்வழிப்பாதையில் அடைப்பு: சீராக்க 'மெட்ரோ' உதவியை நாடும் மாநகராட்சி
வேளச்சேரி: வீராங்கால் கால்வாய் வழித்தடத்தின் குறுக்கே வரும் சாலை மற்றும் ரயில் தண்டவாள பாலப்பகுதியின் கீழ் நான்கு இடங்கள், 20 ஆண்டுகளாக துார் வார முடியாமல் உள்ளன. அப்பகுதியில் நாளுக்கு நாள் சேர்ந்த மண் மற்றும் கழிவுகள் இறுகி, தற்போது பாறைபோன்று மாறியுள்ளது. நீரோட்டம் பாதிக்கப்படாமல் இருக்க அதை உடைத்து அகற்ற, சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகத்தின் உதவியை மாநகராட்சி நாடியுள்ளது.
வேளச்சேரி, ஆதம்பாக்கம் ஏரிகள் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து வெளியேறும் மழைநீர், வீராங்கால் கால்வாய் வழியாக சதுப்பு நிலத்தை அடைகிறது.
இக்கால்வாய் வழித்தடத்தில், வேளச்சேரியில் சாலை மற்றும் ரயில் தண்டவாளம் வரும் நான்கு இடங்களில், பாலத்தின் கீழ் பகுதியில் 180 அடி துாரத்திற்கு கால்வாயில் 8 அடி உயரத்திற்கு கழிவுகளால் அடைப்பு ஏற்பட்டுள்ளது.
அவற்றை துார் வாரும் வகையில் இயந்திரம் இல்லாததால், 20 ஆண்டுகளாக துார் வாரப்படாமல் வெள்ளம் சீராக வடிவதில் சிக்கல் நீடிக்கிறது.
இதனால், ஒவ்வொரு மழைக்கும் வேளச்சேரி மற்றும் சுற்றுவட்டார பகுதிகள் கடுமையாக பாதிக்கப்படுகின்றன. மாநகராட்சியால் அடைப்பை அகற்ற முடியாததால், தற்போது மெட்ரோ ரயில் உதவியை நாடியுள்ளது.
இதுகுறித்து, மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது:
கடந்த 20 ஆண்டுகளாக சேர்ந்த கழிவுகள், கெட்டியாகி, வீராங்கால் கால்வாயின் குறுக்கே 180 அடி துாரத்திற்கு அடைப்பு ஏற்பட்டுள்ளது. நீரோட்டம் பாதிக்கப்படாமல் இருக்க, நெடுஞ்சாலை துறை, ரயில்வே நிர்வாகம் அடைப்பை அகற்ற வேண்டும். அவர்கள் கண்டுகொள்ளவில்லை. இதையடுத்து, கடந்த ஏப்., மே மாதங்களில் அடைப்பை அகற்ற முயற்சி செய்தோம்.
பாறை போல் கெட்டியாகி இருப்பதால், அதை உடைத்து அகற்ற தேவையான இயந்திரம் மாநகராட்சியிடம் இல்லை. மெட்ரோ ரயில் பணிக்கு நவீன இயந்திரங்கள் பயன்படுத்துவதால், அதன் வாயிலாக அடைப்பை அகற்ற கேட்டோம்.
ஒப்பந்த நிறுவன அலுவலர்கள் அடைப்பை பார்வையிட்டனர். அவர்கள், மேலதிகாரிகளின் உரிய உத்தரவுக்காக காத்திருக்கின்றனர். மாநகராட்சி கமிஷனர் வாயிலாக பேசி, அடைப்பை அகற்ற முயற்சி செய்து வருகிறோம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
மேலும்
-
' புகையிலை இல்லா இளைஞர்கள்: ஆரோக்கியமான நீலகிரி ': திட்டத்தை செயல்படுத்த ஒத்துழைப்பு அவசியம்
-
அடுத்தடுத்து நான்கு காட்டு யானைகள் உயிரிழப்பு: நீலகிரி வனவிலங்கு ஆர்வலர்கள் அதிர்ச்சி
-
எஸ்ஐஆர் பணியால் போலி வாக்காளர்கள் நீக்கம்; ராகுல் குற்றச்சாட்டுக்கு கர்நாடகா காங்., அமைச்சர் எதிர்ப்பு
-
8 புதிய நிறுவனங்களுக்கு அனுமதி, சமூக நீதி ஆணையம் அமைக்கப்படும்; தமிழக அமைச்சரவை முடிவு
-
ககன்யான் திட்டத்தின் முதல் ஆளில்லா செயற்கைக்கோள் இந்தாண்டுக்குள் ஏவப்படும்; இஸ்ரோ தலைவர்
-
மக்களின் தேவை அறிந்து அமைச்சர்கள் செயல்பட வேண்டும்: முதல்வர் விஜய் அறிவுறுத்தல்