ஒவ்வொரு மாணவர்களுக்கும் குறிக்கோள் அவசியம்: முதன்மைக் கல்வி அதிகாரி மகாலட்சுமி அறிவுரை

கடலுார்: ஒவ்வொரு மாணவர்களுக்கும் ஒரு குறிக்கோள் இருக்க வேண்டும் என, மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரி மகாலட்சுமி பேசினார்.

கடலுார் கிருஷ்ணசாமி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் நடந்த ‘தினமலர்’– பட்டம் இதழ் வினாடி வினா போட்டி பரிசளிப்பு விழாவில் அவர் பேசியதாவது: இங்கு, கலெக்டர் கூறியது போன்று, ஒவ்வொரு மாணவர்களுக்கும் ஒரு குறிக்கோள் இருக்க வேண்டும். அந்த குறிக்கோளை அடைவதற்கான முயற்சிகளை நோக்கி மாணவர்கள் பயணிக்க வேண்டும். இதன் மூலமாக வாழ்க்கையில் உயர்ந்த நிலையை அடைய முடியும். ‘தினமலர்’ –பட்டம் இதழை பல ஆண்டுகளாக பார்த்துக் கொண்டிருக்கிறேன். இதன் மூலமாக பல்வேறு தகவல்களை தெரிந்து கொள்ள முடிகிறது. ‘தினமலர்’ நாளிதழை படிக்காத ஆட்களே இல்லை என்ற நிலை உள்ளது.

கலை, இலக்கியம், அறிவியல், தற்போதைய தொழில்நுட்ப வளர்ச்சிகள் என பல்வேறு தகவல்கள் ‘தினமலர்’ –பட்டம் இதழில் இடம் பெற்றுள்ளது. இதனை மாணவ, மாணவிகள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும். ‘தினமலர்’– பட்டம் இதழை படித்தாலே அனைத்து விஷயங்களையும் தெரிந்து கொள்ள முடியும். கல்வி என்பது படிப்பு மட்டும் இல்லை. நற்பண்புகளை கற்பிக்கும் இடங்களாக கல்வி நிலையங்கள் செயல்படுகின்றன.

ஆசிரியர்களை மதித்தல், பெருந்தன்மையோடு சகஜமாக பழுகுதல், சகோதரத்துவம் போன்ற நற்பண்புகளை பெற்று மாணவர்கள் சிறந்த குடிமக்களாகி நாட்டிற்கு பெருமை சேர்க்க வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

Advertisement