கூட்டுறவு நிறுவனங்களில் உரங்கள் இருப்பு அரசு நிர்ணயித்த விலைக்கு விற்பனை: கூட்டுறவு சங்க மண்டல இணைப்பதிவாளர் தகவல்

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள கூட்டுறவு நிறுவனங்களில் உரங்கள் இருப்பில் உள்ளது என கூட்டுறவு சங்க மண்டல இணைப்பதிவாளர் முருகேசன் தெரிவித்துள்ளார்.

அவரது செய்திக்குறிப்பு:

மாவட்டத்தில் உள்ள கூட்டுறவு சங்கங்கள், மலைவாழ் பெரும்பல நோக்கு கூட்டுறவு சங்கங்களில் விவசாயத்திற்கு தேவைப்படும் உரங்கள் இருப்பு வைக்கப்பட்டுள்ளது. நடப்பு சாகுபடி பருவத்திற்கு தேவையான யூரியா, டி.ஏ.பி., பொட்டாஷ் காம்ப்ளக்ஸ், கலப்பு உரங்கள்.

டான்பெட் நிறுவனத்தின் சிறப்பு தயாரிப்புகளான பாமணி கலப்பு உரங்கள், வேப்பம் விதைதுாள், மண்புழு உரம், உயர் உரம், உயிர் பூச்சிக்கொல்லி மருந்துகள், நுண்ணுாட்ட சத்து உரங்கள், நீரில் கரையும் உரங்கள். நானோ யூரியா, நானோ டி.ஏ.பி., உட்பட அனைத்து வகையான உரங்களும், விதைகளும் போதிய அளவு இருப்பில் உள்ளது.

கூட்டுறவு சங்கங்களில் கடன் பெறாத விவசாயிகளும் பணம் செலுத்தி உடனடியாக உரங்களைப் பெற்றுக் கொள்ளலாம். அரசு நிர்ணயித்துள்ள நியாமான விலையில் மட்டுமே உரங்கள் விற்பனை செய்யப்படுகிறது.

உரம் தேவைப்படும் விவசாயிகள் தங்களது ஆதார் அட்டை அல்லது பட்டா நகலை சமர்ப்பித்து, பி.ஓ.எஸ்., இயந்திரத்தில் கைவிரல் ரேகையை பதிவு செய்து தேவையான உரங்களை எளிதில் பெறலாம்.

வெளிச்சந்தையில் கூடுதல் விலைக்கு உரங்கள் வாங்குவதைத் தவிர்த்து, கூட்டுறவு சங்கங்களில் விற்பனையாகும் உரங்களை வாங்கி விவசாயிகள் பயனடைய வேண்டும்.

இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Advertisement