மானாவாரி விவசாயிகளுக்கு அடங்கல் வழங்க தாமதம்
சாத்துார்: சாத்துார் மானாவாரி விவசாயிகளுக்கு அடங்கல் வழங்காததால் பயிர் கடன் பெற முடியாமல் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
சாத்துார் சின்ன ஓடைப்பட்டி , பெரிய ஓடைப்பட்டி,பெத்து ரெட்டிபட்டி, என். மேட்டுப்பட்டி, நென்மேனி, பாப்பாகுடி, வன்னிமடை, இருக்கன்குடி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் மானாவாரி நிலத்தில் விவசாயிகள் மக்காச்சோளம் , பருத்தி, பாசிப்பயறு, உளுந்து உள்ளிட்ட பயிர்களை விதைத்துள்ளனர்.
தற்போது தொடர்ந்து பெய்து வரும் பருவமழை காரணமாக பயிர்கள் முளைத்து வருகின்றன. இந்நிலையில் சென்ற ஆண்டு அக்டோபர் மாதத்திலேயே வருவாய்த்துறையினர் பயிர் விளைச்சலை பார்வையிட்டு அளவிட்டு விவசாயிகளுக்கு அடங்கல் சான்று வழங்கி விட்டனர்.
இதனால் அடங்கல் சான்று பெற்ற மானாவாரி விவசாயிகள் கூட்டுறவு சங்கங்களில் பயிர் கடன்களுக்கு விண்ணப்பித்து மேற்கொண்டு களை எடுப்பு மற்றும் மருந்து தெளித்தல் போன்ற பணிகளுக்கு பணத்தை கடனாக பெற்று விவசாயம் செய்தனர்.
ஆனால் தற்போது அக். 28 ஆகியும் வருவாய்த்துறையினர் மானாவாரி விவசாயிகளுக்கு அடங்கல் சான்று வழங்கவில்லை. இதனால் விவசாயிகள் மேற்கொண்டு விவசாய பணிகளை செய்வதற்கு கூட்டுறவு வங்கிகளில் பயிர் கடன் பெற முடியாமல் அவதிப்படும் நிலை உள்ளது. வருவாய்த்துறையினர் உடனடியாக விளை நிலங்களை பார்வையிட்டு அளவிட்டு அடங்கல் சான்று வழங்கிட வேண்டுமென மானாவாரி விவசாயிகள் மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.