அச்சுறுத்தும் பாதாள சாக்கடை: வாகன ஓட்டுனர்கள் தவிப்பு
உடுமலை: உடுமலை நகரில், போக்குவரத்து நெரிசல் மிகுந்த ரோட்டில், பாதாள சாக்கடை ஆளிறங்கு குழி மூடி உடைந்து கழிவு நீர் வெளியேறுவதால், வாகன ஓட்டுநர்கள் விபத்துக்குள்ளாகி வருகின்றனர்.
உடுமலை பழைய பஸ் ஸ்டாண்ட் அருகே தாராபுரம் மாநில நெடுஞ்சாலை பிரிகிறது. நகரப்பகுதியில் இந்த நெடுஞ்சாலையில் அதிகளவு போக்குவரத்து நெரிசல் இருக்கும். எனவே, நகர எல்லை வரை இந்த ரோட்டில் சென்டர்மீடியன் வைக்கப்பட்டுள்ளது.
இருபுறங்களிலும் ஆக்கிரமிப்பு அகற்றப்படாத நிலையில், குறுகலான இடத்தில், வாகனங்கள் சென்று வருகின்றன. இந்நிலையில், அங்குள்ள பஸ் ஸ்டாப் அருகே பாதாள சாக்கடை ஆளிறங்கு குழி மூடி உடைந்து கழிவு நீர் வெளியேறி வருகிறது.
வாகனங்கள் விலகிச்செல்ல முடியாததால், இரவு நேரங்களில் இருசக்கர வாகன ஓட்டுநர்கள் அப்பகுதியில் நிலைதடுமாறி விழுந்து விபத்துக்குள்ளாகின்றனர். கார் மற்றும் கனரக வாகனங்கள் செல்லும் போது கழிவு நீர் தெறிக்கிறது.
விபத்து அபாயம் அதிகரித்தும் நெடுஞ்சாலைத்துறையினரும், நகராட்சி நிர்வாகத்தினரும் நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால், வாகன ஓட்டுநர்கள் அதிருப்தியில் உள்ளனர்.